அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; அதிரடி ஆரம்பம்!
நேற்றைய தினம் மிகச்சிறப்பாக பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்தவகையில், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது துவங்கியுள்ளது. இதனை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். காலை 7 மணி அளவில், தொடங்கவிருந்த போட்டியானது, உதயநிதி ஸ்டாலினின் வருகையில் தாமதம் ஏற்பட்டதால் 1 மணி நேரத்திற்கு மேலாக தள்ளிப்போனது.
இந்தநிலையில், ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் நிகழ்வாக, வாடிவாசலிலிருந்து கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இதில், 1100 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு தங்க, வெள்ளி, நாணயங்கள், சைக்கிள், அண்டா, டிவி என பல பரிசுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் கலந்து கொள்வார்கள்.
சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் சார்பில் 10 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. சிறந்த காளைக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு கொடுக்கப்பட இருக்கிறது. இரண்டாம் பரிசாக ஷேர் ஆட்டோ வழங்கப்படவுள்ளது. மேலும், பாதுகாப்பு பணிக்காக 2500 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனை!
முன்னதாக , கொம்பு கூர்மையாக உள்ளதா? கொம்பில் ரசாயனம் பூசப்பட்டுள்ளதா? மது கொடுக்கப்பட்டுள்ளதா? என காளைகளுக்கான இறுதிக்கட்ட மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டது. காளைகளுக்கு போலி டோக்கன் வழங்குவதை தடுக்க QR கோடு முறை பயன்படுத்தப்பட்டது. 5786 காளைகளை ஆய்வுசெய்ததில் 1100 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
காளைகளை பரிசோதனை செய்ய 21 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் களத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்களுக்கு காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, மருந்து அருந்தியுள்ளனரா? போன்றவை கணக்கிட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 1600க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டநிலையில், 900 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது.