பனையூர் | "உயிருள்ள கடைசி நொடி வரை... தளபதிக்காக.." தவெக நிர்வாகி அஜிதா பேட்டி.!
தங்கள் பயணம் தவெகவில் மட்டுமே தொடரும் என தவெக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதா ஆக்னல் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தில், விடுபட்ட தூத்துக்குடி,திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்தார். முன்னதாக, பொறுப்பு வழங்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இன்று தவெக பனையூர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக தொடங்கிய நாள் முதல் இரண்டு ஆண்டுகளாக தமிழக வெற்றிக் கழகத்திற்காக பணிகளை மேற்கொண்டு வந்த அஜிதா பெயர் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இடம்பெறாத அதிருப்தியில், தவெக தலைவர் விஜயை சந்தித்து முறையிடும் வகையில் பனையூர் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்திருந்தார்.
தொடர்ந்து, தவெக அலுவலகத்திற்கு செல்ல முயன்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, தவெக தலைவர் விஜய் அலுவலகத்திற்கு வரும்போது அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவரின் காரை மறித்துப் பேச முற்பட்டனர். ஆனால், விஜய் அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் பேசாமல், அலுவலகத்திற்கு உள்ளே சென்றார். இந்நிலையில், தொடர்ந்து பனையூர் தவெக அலுவலகத்தில் காத்திருந்த அஜிதா, விஜய் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பின் நீதி கேட்டு அலுவலகத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டார். இரவு 7 மணி வரை தர்ணாவில் ஈடுபட்டிருந்த அஜிதா பின் தர்ணா போராட்டத்தை கைவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " CTR நிர்மல்குமார் மூலமாக தலைமையில் இருந்து தகவல் வந்தது. தலைமை மீதும் தளபதி மீதும் நம்பிக்கை இருக்கிறது. சீக்கிரமாக எங்களை அழைத்து பரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என்றும் எங்களது பயணம் தமிழக வெற்றி கழகத்தில் தளபதியுடன் மட்டுமே தொடரும். எங்களது உயிர் மூச்சுள்ள கடைசி நொடி வரை தமிழக வெற்றி கழகத்திற்காகவும், தளபதிக்காகவும் பயணப்போம்" என தெரிவித்தார்.

