மகனை பார்த்து பார்த்து அழும் தாய்.. "அஜித்துக்கு இதை மட்டும் செய்யுங்க" அஜித் அம்மா உருக்கம்
தனது மகன் மேல் சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட வேண்டும்.. அவன் மேல் விழுந்த பழி அழிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை வைத்துள்ளார் அஜித்குமாரின் தாயார். அஜித் மரணித்து ஒரு வாரம் கடந்த நிலையில், மகனின் போட்டோவை பார்த்து தாய் சிந்தும் கண்ணீர் பலரின் மனதையும் ரணமாக்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது பலரும் புகார் கொடுத்து வருகின்றனர். மறுபுறம், நகை உண்மையில் திருடப்பட்டதா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் அஜித்தின் குடும்பத்தார்.
அஜித்குமாரை திட்டமிட்டு கொன்றதாகவும், திருடியதால்தான் காவலில் எடுக்கப்பட்டார் என்ற களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்று குடும்பத்தார் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில்தான், மகன் குறித்து பேசிய அஜித்தின் தாய், எல்லோருடனும் நன்றாக பழக்கூடியவன்தான் அஜித்.. எந்த தவறான வழியிலும் செல்ல மாட்டான்.. 10 பைசாவுக்கு கூட ஆசைப்பட மாட்டான்.. மகன் தவறானன் இல்லை.. இதனை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். அதுவே எனக்கு மிகப்பெரிய சொத்து.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் மகன் மீது இருக்கும் பழியை நீக்க வேண்டும் என்றவர், மகன் நிரபராதி என்பது பொதுமக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தாய்க்கும் தலைச்சன் பிள்ளைக்குமான பாசம் எப்போதுமே அலாதியானது.. எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும், தலைச்சன் பிள்ளை மீது தனி அன்பு இருக்கும். அஜித்குமார் விவகாரத்தில், அவரது தந்தை மறைந்த பின்னர் குடும்பத்தை அவரே கவனித்து வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பிறகு இடிந்தே போயிருக்கிறார் தாய் மாலதி.. இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.