\
Ajith and Vijay
Ajith and VijayANI

அஜித் ரசிகர்கள் கட்சி துவக்கம்.. பின்னணியில் என்ன காரணம்?

நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளனர்.
Published on
Summary

தமிழ் சினிமாவின் இரு துருவங்களான அஜித், விஜய் போட்டி நடுவே, விஜய் வெற்றிக் கழகத்தின் மூலம் முதல்வராக உயர்ந்த நிலையில், அஜித் அரசியலுக்கு வராதது ரசிகர்களை தூண்டியுள்ளது. கள்ளக்குறிச்சி எலவனாசூர்கோட்டையில் அஜித் ரசிகர்கள் ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி, மனிதநேயம், மதச்சார்பின்மை, சமூகநீதி, பெண்ணுரிமை, தமிழர் நலம், தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை கொள்கைகளாக அறிவித்துள்ளனர்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருந்தவர்கள் தான் நடிகர் அஜித்தும், விஜயும். இவர்கள் இருவருக்கும் இடையே, சினிமாதுறையில் மிகப்பெரிய போட்டி நிலவி வந்திருந்தது. இருவரது ரசிகர்கள், எப்போதும் எதிரும் புதிருமாகவே இருந்து வந்துள்ளனர். என்னதான் ரசிகர்கள் இவ்வாறு இருந்தாலும், அஜித், விஜய் இடையே நல்ல நட்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இதற்கிடையே, சினிமாவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய விஜய், தற்போது தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சராக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். இவரைத் தொடர்ந்து நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற குரல் ஆங்காங்கே அவர்களது ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. ஆனால், அதில் ஆர்வமே காட்டாத அஜித், எப்போதும் போல கார் ரேசிங்கிலும், நடிப்பிலுமே முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ரசிகர்கள், புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். அதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில், தமிழக மக்கள் கழகம் என்ற கட்சியை, நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களுடனும், நடுவில் இரண்டு சிறுத்தைகளுடனும், கட்சியின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்சியின் மாநில தலைவராக ஆபித் என்பவரும், மாநில செயலாளராக ராம்குமார் என்பவரும், மாநில பொருளாளராக முகமது ஷா என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Vijay and Ajith
Vijay and AjithANI

மேலும், பல்வேறு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, கட்சியின் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது. கட்சியின் கொள்கை குறித்து பேசிய மாநில தலைவர் ஆபித், மனித நேயத்துடன் கூடிய மதசார்பற்ற மக்கள் பணி, சாதி சமயமற்ற சமூக நீதிகோட்பாட்டை வலியுறுத்துதல் , இயற்கை வள பாதுகாப்பு, பெண்ணுரிமை, சம வாய்ப்பு, தமிழர் நலம் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி ஆகியவற்றை முக்கிய கொள்கைகளாக கொண்டு இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ள, நடிகர் அஜித்குமாருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தய விழாவில் விஜய் கலந்துகொண்டது அதிகமாக பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது அஜித் ரசிகர்கள் புதிய கட்சியைத் தொடங்கியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com