Fridge முதல் Wifi வரை |இலவசங்களை அள்ளித் தெளித்த இபிஎஸ்.. அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பிரசாரத்தின்போது மூன்று கட்டங்களாக சில வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், இன்று மொத்தமாக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக, சசிகலா - ராமதாஸ் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. எல்லாக் கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் கவனம் செலுத்திவருகின்றன. தனித்து நிற்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை என அனைத்தையும் வெளியிட்ட நிலையில், தற்போது அது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. திமுகவோ இன்னும் ஒரு சில கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுகவோ கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தொகுதிப் பங்கீடுகளை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட தயாராகி வருகிறது. அது, தற்போது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பிரசாரத்தின்போது மூன்று கட்டங்களாக சில வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும், 'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும், மகளிருக்கு ரூ.25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும், முதியோர் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியம் 2000 ரூபாயாக உயர்த்தப்படும், வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும், ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது மாடுபிடி வீரர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவின் முழுத் தேர்தல் அறிக்கையையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார். அதில்,
இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர்பதனப் பெட்டி (Fridge) விலையில்லாமல் வழங்கப்படும்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
தீபாவளிக்கும் விலையில்லா வேட்டி, சேலை; பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம்.
10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம்
இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படும்.
கொத்தடிமை இல்லா மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும்.
மதம் மாறினாலும் பட்டியலின மக்களுக்கான சலுகை தொடர நடவடிக்கை
அறநிலையத் துறை கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு
கஞ்சா, போதைப் பொருளை ஒழிக்க முதலிவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் சிறப்பு அதிரடிப் படை
அனைத்து முக்கிய நகரங்கள், சுற்றுலா மையங்கள் இலவச வைஃபை
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
மீண்டும் 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்.
தெருநாய்களுக்கு சிறப்புக் கருத்தடை கொண்டு வரப்படும்.

