”அதிமுக கூட்டணியில் இணைந்தது பாமக” - எடப்பாடி பழனிசாமி., அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ’பாட்டாளி மக்கள் கட்சி’ அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று காலை அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் கூட்ட செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “ 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தற்போது இணைந்துள்ளது. மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையவுள்ளனர். எங்களது கூட்டணி இயற்கை கூட்டணி. அதிமுக மற்றும் பாமகவில் உள்ள தலைவர், நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பியவாறு இந்தக் கூட்டணியை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் அதிமுக கூட்டணி செயல்பட்டு, 2026-ல் ஆட்சி அமைக்கும். தொகுதிப் பங்கீடு குறித்தான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், “ அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. பாமக தொண்டர்கள் விரும்பியவாறு இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். திமுகவை அகற்றும் நோக்கில், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் உறுதியாக வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக, பாமக அன்புமணி ராமதாஸ் தரப்பு மற்றும் ராமதாஸ் தரப்பு என இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், பாமகவை ஒருங்கிணைக்க அதிமுக முயற்சி செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தான், இன்று அன்புமணி ராமதாஸ் பாமக கூட்டணியில் இணைந்துள்ளார். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பையும் கூட்டணியில் கொண்டுவர அதிமுக தரப்பில் இருந்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு வந்திருந்த நிலையில், தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில், கூட்டணி காய் நகர்த்தல்கள் வேகமெடுத்திருக்கிறது. தொடர்ந்து, இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

