\
AIADMK Leaders Slam Alliance Decisions Ahead of 2026 Polls
எஸ்.பி. வேலுமணி - கே. பழனிசாமி - நத்தம் விஸ்வநாதன்Pt web

"தவெக கூட்டணியை தவறவிட்டோம்” - அதிமுகவில் மீண்டும் குழப்பம்! கூட்டறிக்கை வெளியீடு!

2026 சட்டமன்ற தேர்தலில் பிரம்மாண்ட கூட்டணி அமைப்பதாக தெரிவித்ததோடு, கூட்டணிக்கு நம்மை நாடி வந்த தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளை தன்னிச்சையாக வெளியேற்றிவிட்டீர்கள் என எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Published on
Summary

2021, 2024, 2026 தேர்தல்களில் அதிமுக சந்தித்த தோல்விகளுக்கு, தவறான கூட்டணி முடிவுகள், உள்கட்சிக் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை நீக்கம் செய்தது போன்ற நடவடிக்கைகளே காரணம் என முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கடும் விமர்சனம் எழுப்பியுள்ளனர். பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அமர்த்தி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவின் ஒரு தரப்பு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. சட்டமன்றத்தில் தனிக்கட்சிபோல செயல்பட்டதுடன், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் செய்தனர். இதனால், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்ததுடன், அந்தப் பொறுப்புகளில் தனது ஆதரவாளர்களை நியமித்தார் எடப்பாடி கே.பழனிசாமி. தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் பழனிசாமி பக்கம் வந்தார்கள். அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டாலும் பறித்த பதவிகளை மட்டும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே. பழனிசாமி வழங்காமல் இருந்து வருகிறார்.

இபிஎஸ், சண்முகம், வேலுமணி
இபிஎஸ், சண்முகம், வேலுமணிPt web

இதற்கிடையில், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு அக்கட்சியில் மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், அதிமுக புதிய பிரச்னைகள் எதுவும் கிளம்பவில்லை, உட்கட்சிப் பூசலும் சற்று தணிந்திருந்தது.

இந்தச்சூழலில் தான், கே. பழனிசாமி தலைமையில் அதிமுகவில் பல தவறான முடிவுகள் எடுகப்பட்டதாகவும், அதிமுகவில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் எனக் கோரியும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

AIADMK Leaders Slam Alliance Decisions Ahead of 2026 Polls
பணம், நேரம், ஆற்றலை எடுத்துக் கொண்டு.. 1,000 பேரில் 12 பேருக்கே வேலை - ராகுல் காந்தி கேள்வி

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பலமுறை பிரம்மாண்ட கூட்டணி அமைப்பதாக தெரிவித்ததோடு, கூட்டணிக்கு நம்மை நாடி வந்த தே.மு.தி.க மற்றும் புதிய தமிழகம் கட்சிகளை நம்மோடு இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியேற்றிவிட்டீர்கள். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால், 2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்து உங்களுடைய தவறான முடிவுகளால் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்தது.

கூட்டறிக்கை
கூட்டறிக்கைx

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கழகம் தொடர்ந்து பலவீனப்பட்டு வரும் இந்த சூழ்நிலையிலும் சிறப்பாக கழகப் பணிகளில் செயல்பட்டு வந்த பல மாவட்டங்களின் நிர்வாகிகளை கழக பொறுப்புகளில் இருந்து நீக்கியிருக்கிறீர்கள். குறிப்பாக, கழக செயற்குழு, பொதுக்குழுவில் தங்களது கருத்துக்கு எதிராக யாரும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்க கூடாது என்று செயற்குழு, பொதுக்குழுவில் அனைவரின் பொதுவான கருத்தை வெளிப்படுத்தவும், தங்களது செயல்பாடுகளுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் கழகம் எந்த நிலைக்கு தாழ்ந்தாலும் நான் சொல்லுவதை மட்டும்தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மையில் இதுவரை 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை கழக சட்டத்திட்டங்களுக்கு முரணாக கழகத்திலிருந்து நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள்.

AIADMK Leaders Slam Alliance Decisions Ahead of 2026 Polls
”வழிபாட்டு உரிமை சலுகை அல்ல; அது அடிப்படை உரிமை” - நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன்

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு 4 ஆண்டு 8 மாதம் இருக்கிறது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் 6 மாதத்தில் வர உள்ளது, இதில் கிளை கழக செயலாளர் மற்றும் அடிமட்ட தொண்டன் வரை உள்ளாட்சி பதவிக்கு வருவார்கள், இது ரொம்ப முக்கியமானதாகும். இதற்கு கட்சியை பலபடுத்தியே ஆக வேண்டும்.

அதிமுகவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உண்மையான அக்கறையும், ஈடுபாடும் இருக்குமே ஆனால் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் மறப்போம், மன்னிப்போம் என்கிற அடிப்படையில் கழக நலன் கருதி கழகத்தினரிடமிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளிப்படும் பொழுது அவற்றை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடன் 13.05.2026க்கு பிறகு கழகத்தின் பல்வேறு நிலைகளில் இன்று வரை பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டும், கழகத்தில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு அவர்கள் வகித்து வந்த பதவிகளை வழங்கி கழக பொதுச் செயலாளர் அவர்கள், கழகத்தை வலுபடுத்த முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AIADMK Leaders Slam Alliance Decisions Ahead of 2026 Polls
தொகுதி மறுவரையறை | தமிழக அரசின் எம்.பி-க்கள் கூட்டம் நிறைவு - தலைவர்கள் பேசியது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com