திமுகவில் இணைந்த அதிமுக EX MP மைத்ரேயன்.. அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து கட்சிகள் கூட்டணி வகிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேநேரத்தில், கட்சியில் அதிருப்தி அடைந்த மூத்த தலைவர்கள் சிலர், பிற கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். அவருக்கு கலை இலக்கிய அணி மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது
அதன் தொடர்ச்சியாக, அதிமுக முன்னாள் எம்.பியான மைத்ரேயனும், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார். அவர், கடந்த 2023ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர், கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். தற்போது மைத்ரேயன் அதிமுகவில் இருந்தும் விலகி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய மைத்ரேயன், “தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் முயன்று வருகிறார். அதிமுக, பாஜக வலையில் சிக்கித் தவிக்கிறது. கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. டெல்லிக்கு கட்டுப்பட்டு எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணியால் பலர் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி அமைத்ததில் அதிமுகவில் உள்ள பல மூத்த தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை எனவும், பாஜகவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டே அதிமுக நடப்பதாகவும் அவர்களிடம் அதிருப்தி நிலவுகிறது. இதையடுத்தே, மூத்த தலைவர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகவும், அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.