விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கிய EPS! அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சிகாரணமா?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் 39 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக நிர்வாகியான ஹரிகிருஷ்ணன் தன்னுடைய அறக்கட்டளை சார்பில் திண்டிவனத்தில் உள்ள திடல் ஒன்றில் புதன்கிழமை 39 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வை நடத்தினார். இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
காலை 10.15 மணிமுதல் 11.45 வரை நடைபெற்ற திருமண விழாவில் 39 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் சம்பத், மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் முக்கிய அங்கத்தினராக பங்கேற்றனர். இந்த நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும் ஹரிகிருஷ்ணனின் தந்தையுமான முரளி என்ற ரகுராமன் கலந்து கொண்டார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரான முரளி என்ற ரகுராமனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை குறிக்கோள் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பொருளும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் S.முரளி என்ற ரகுராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சி உறுப்பினர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முரளி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான விழாவில் கலந்துகொண்ட நிலையில், இன்று அவர் நீக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே அதிமுக - பாஜக இடையே சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், இது அதை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. நேற்றுதான் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் ஈபிஎஸ் தீர்மானம் நிறைவேற்றினார்.