\
புதிய தலைமுறை இருட்டடிப்பு - அதிமுக கண்டனம்
புதிய தலைமுறை இருட்டடிப்பு - அதிமுக கண்டனம்pt web

"இது அப்பட்டமான திமுக மாடல்" புதிய தலைமுறை இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு அதிமுக கண்டனம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், நேற்றைய தினம் ‘புதிய தலைமுறை’ இருட்டடிப்பை எதிர்கொண்ட நிலையில் சமூக ஊடகங்களில் பலரும் அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அதிமுகவும் தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.
Published on

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், நேற்றைய தினம் இருட்டடிப்பை எதிர்கொண்டது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி. இந்நிலையில், நேற்று மதியம் முதலாக ‘புதிய தலைமுறை’ தெரியவில்லை என்று நேயர்கள் பலரும் பேசலானார்கள். என்ன காரணத்தால், ‘புதிய தலைமுறை’ தெரியவில்லை என்று அரசு தரப்பை நாம் அணுகி கேட்டபோது முறையான பதிலைப் பெற முடியவில்லை.

அரசுத் தரப்பிடமிருந்து உரிய பதிலைப் பெற்ற பின் இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று காத்திருந்தது புதிய தலைமுறை. இதனூடாக புதிய தலைமுறை தெரியவில்லை எனும் செய்தியை அறிந்த பலரும் சமூக வலைதளங்களில் கொதித்து எழுந்தனர்.

ஆயினும், புதிய தலைமுறைக்கு இது புதிய அனுபவம் இல்லை. தமிழ்நாட்டில் மக்கள் குரலை உரக்கப் பேசும் ஊடகமான ‘புதிய தலைமுறை’ வெவ்வேறு ஆட்சிகளிலும் இத்தகைய தாக்குதலை எதிர்கொண்டுவருவதை ‘புதிய தலைமுறை’ பார்வையாளர்கள் நன்கறிவார்கள். யார் நல்லது செய்தாலும் அல்லது செய்தாலும் உள்ளது உள்ளபடி உண்மையை உரக்கப் பேசும் புதிய தலைமுறையின் துணிச்சலான நடுநிலை அணுகுமுறையே தமிழ் மக்கள் அதை இவ்வளவு மதிக்க முக்கிய காரணம். அதே துணிச்சலான நடுநிலை அணுகுமுறையே ஆட்சியாளர்கள் ‘புதிய தலைமுறை’ மீது அடக்குமுறையை ஏவவும் முக்கிய காரணம்.

புதிய தலைமுறை இருட்டடிப்பு - அதிமுக கண்டனம்
”புதிய தலைமுறை இருட்டடிப்பு; அரசாங்கத்தின் அதிகாரத் திமிர்” - தராசு ஷ்யாம்

பொதுவாக, முதல்வர்கள் டெல்லி செல்லும்போது, செய்தியாளர்களைச் சந்திப்பது மரபு. முதல்வர் விஜய், பதவியேற்ற நாளிலிருந்தே ஊடகங்களிடம் பேசவில்லை என்பதோடு, டெல்லியிலும் பத்திரிகையாளர்களைச் சந்திக்காதது விமர்சனமானது. இந்தப் பின்னணியில் பெருஞ்செய்தி பகுதியில் இதை வெளியிட்டது புதிய தலைமுறை.

இதன் தொடர்ச்சியாகத்தான் புதிய தலைமுறை இருட்டடிக்கப்பட்டதோ எனும் கேள்வி எழுந்த சூழலில், “உண்மையைப் பேசும் மக்கள் ஊடகமான புதிய தலைமுறையை இருட்டடிப்பு செய்வதா? ஊடக சுதந்திரத்தின் மீது அடக்குமுறையை ஏவி ஜனநாயகத்தைத் தாக்குவதா?” என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்பட பலரும் சமூகவலைதளங்களில் கடும் எதிர்வினை ஆற்றினர். விளைவாக, நேற்று இரவு முதலாக மெல்ல பழையபடி மீண்டது புதிய தலைமுறை ஒளிபரப்பு. அரசு கேபிள் சேவையில் இப்போது மீண்டும் தெரிகிறது புதிய தலைமுறை.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிமுக தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அதிமுக வெளியிட்டிருக்கும் பதிவில், "அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

“திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க” என கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைதள பதிவுகள் மீது வழக்குகள், எதிர்கட்சியினரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்க காவல்துறை வாயிலாக X, Meta ஆகிய நிறுவனங்களுக்கு கடிதங்கள், அரசை விமர்சித்த நபர் கைது, தற்போது செய்தி சேனல் முடக்கம்… இது அப்பட்டமான திமுக மாடல்!

அப்படி எதற்காக புதிய தலைமுறை Blackout செய்யப்படுகிறது என்று பார்த்தால், டெல்லியில் இன்றைய முதல்வர் செய்தியாளர்களை சந்திக்காமல் தெறித்து ஓடிய செய்தியை வெளியிட்டது என சொல்லப் படுகிறது.

டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்த போது கூட, “30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்கள் கூறிய போது கூட அதை கண்டுகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர் தானே இவர்?

மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருந்து, தனக்கென ஒரு போலியான Demigod இமேஜ் உருவாக்கிக் கொள்ள இவர்கள் செய்யும் தந்திரம் தான் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி நிற்பது. ஆனால், இது சினிமா அல்ல; பொதுவாழ்க்கை! மக்களின் கேள்விகளை கேட்கும் எதிர்கட்சிகள், ஊடகங்களை நேருக்கு நேர் சந்தித்து பதில் சொல்லத் திராணி இருக்க வேண்டும். அது இன்றைய முதல்வருக்கு இருக்கிறதா? இனியாவது வருமா?

உங்கள் பக்கம் இருக்கும் தவறை ஒரு ஊடகமோ, தனிநபரோ சுட்டிக் காட்டினால், அதை திருத்திக்கொள்ள பாருங்கள்; அல்லது, மறுத்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள். அதை விடுத்து ஊடகத்தை முடக்குவது, தனிநபர்களை கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள்.

புதிய தலைமுறை மீண்டும் அரசு கேபிளில் பழைய வரிசை எண்ணிலேயே ஒளிபரப்பு செய்திட வேண்டும் என இவ்வரசை வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com