வேளாண் பட்ஜெட்டிலும் அதிரடி! பெண்களுக்கு பிரத்யேக அறிவிப்புகள் - எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி?
தமிழக வேளாண் பட்ஜெட்டில் பெண்கள், மாணவிகள், கர்ப்பிணிகள், சுய உதவிக்குழுக்கள், விவசாயப் பெண்கள் ஆகியோருக்கான திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ‘வான்மகள்’ திட்டத்துக்கு ரூ.4 கோடி ஒதுக்கி 100 பெண்கள் உட்பட 500 பேருக்கு ட்ரோன் பயிற்சி, உரிமம், 50% மானியத்தில் ட்ரோன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெண் விவசாயிகள், பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நேற்று தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், பெண்கள், மாணவிகள், கர்ப்பிணிகள், சுய உதவிக்குழுக்கள், விவசாயப் பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கான புதிய திட்டங்களும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் கவனம் பெற்றன. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, இதனை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டில் பெண்கள் பெயரிலும் பெண்களுக்காகவும் சில திட்டங்கள் இடப்பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த திட்டங்கள் என்ன என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்..
‘வான்மகள்' திட்டம் - ரூ.4 கோடி
விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் 'வான்மகள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சிகளும் உரிமமும் வழங்கப்படவுள்ளன. மேலும், பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கிட ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்
மாடித்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க 'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கான இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம் மற்றும் நிழல்வலைக் குடில்கள் அமைப்பதற்கு என மொத்தம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்
2026-27ஆம் ஆண்டில், ₹227.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 24,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் பவர் டில்லர், டிராக்டர், விசைக்கலையெடுப்பான் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. மேலும், சூரியக் கூடார உலர்த்திக்கான அதிகபட்ச மானியம் ₹3.50 லட்சத்தில் இருந்து ₹4.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வேளாண் இயந்திர வாடகை மையங்கள் – ரூ.4 கோடி
விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்களை எளிதாக வாடகைக்கு பெறும் வகையில், ரூ.4 கோடி செலவில் 50 கிராமங்களில் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். ஒரு மையத்திற்கு அதிகபட்சமாக ரூ.8 லட்சம் (80% மானியம்) வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 30 சதவீதம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒதுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர

