அன்புமணி நீக்கம்; தன்னையே தலைவராக அறிவித்த ராமதாஸ்.. கொந்தளிக்கும் தொண்டர்கள்! பாமகவில் நடப்பதுஎன்ன?
``அய்யா ஓய்வு எடுக்கணும்..,அண்ணனை முழுமையாக கட்சிப் பணி ஆற்றவிடணும் அதுதான் பெரும்பாலான நிர்வாகிகளோட எதிர்பார்ப்பு..,ஆனா, ஐயா எங்களையோ அண்ணனையோ புரிஞ்சிக்க மாட்டேங்கிறாரு’’ இப்படி தங்களின் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்க்கிறார்கள் பாமக வட்டாரத்தில்..,பாமக தலைவரான அன்புமணி ராமதாஸை அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் மருத்துவர் ராமதாஸ்..,அதனைத் தொடர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தை, போராட்டங்கள் என கலகலத்துப் போயிருக்கிறது பாமக வட்டாரத்தில்..,நடப்பது என்ன விரிவாகப் பார்ப்போம்..,
”தலைவராக இனி நானே செயல்படுவேன்..” - ராமதாஸ் அதிரடி முடிவு
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்..,அப்போது, ``பா.ம.க.வின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்.கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார். பா.ம.க. தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை சிறுக சிறுக அறிவிப்பேன் அதை இப்போது ஊடகங்கள் முன்பாக அறிவிக்க முடியாது சிறுக சிறுக அறிவிப்பேன்” எனக் கருத்துத் தெரிவித்தார்..,ராமதாஸின் இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்றவைத்தது..,தவிர, பாமக வட்டாரத்திலும் அனலைக் கூட்டியது..,
”கட்சியின் ஜனநாயகம் படுகொலை..” திலகபாமா
ராமதாஸின் இந்த அறிவிப்புக்கு பாமகவிலேயே எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. அன்புமணி ராமதாஸை மீண்டும் தலைவராக அறிவிக்க வேண்டும் என்று பாமகவை சார்ந்தவர்கள், தொண்டர்கள், முன்னாள் நகரமன்ற செயலாளர் ராஜேஷ் தலைமையில் திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டின் முன்பு நின்று கண்டன கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக ராமதாஸின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பாமக பொருளாளர் திலகபாமா, பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ராமதாஸ் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியே. ஆனால் இந்த முடிவு தவறு என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
பாமகவைச் சேர்ந்த பல இளைஞர்கள், மருத்துவர் அன்புமணி ராமதாஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்..,இது ஒருபுறமிருக்க, மருத்துவர் ராமதாஸின் குடும்பத்தினர், பாமக நிர்வாகிகள் அவரின் வீட்டுக்குச் சென்று அவரைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.., அன்புமணியையே மீண்டும் தலைவராக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் என்னதான் பிரச்னை கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்..,
”அண்ணனை முழுமையாக முடிவெடுக்க விடுங்கள்”
``ஐயா எங்களுக்கு தெய்வம் போன்றவர் அதில் மாற்றுக்கருத்தே இல்லை...ஆனால், அவருக்கு வயதாகிவிட்டது, அவர் ஓய்வு எடுக்கவேண்டும் என நினைக்கிறோம்..,தவிர, அண்ணனை முழுமையாக கட்சி விஷயங்களில் முடிவுகளை எடுக்கவிட வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம்..,ஐயாதான் இந்தக் கட்சியை உருவாக்கியவர் என்றாலும், கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடங்கி, தேர்தல் கூட்டணி வரை எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கிறது.., அதில் ஐயாவின் அனுபவத்தையும்தாண்டி, அண்ணனின் சமயோஜித நடவடிக்கைகளும் கட்சி நலனுக்கு முக்கியமாக இருக்கிறது..,ஆனால்,.ஐயா தன் விருப்பத்துடந்தான் அனைத்தும் நடக்கவேண்டும் என நினைக்கிறார்..,அண்ணனை முழுமையாக சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மறுக்கிறார்..,அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைய சம்பவத்தைப் பார்க்கமுடியும்..,ஆனால், ஐயா சமாதானம் ஆகிவிடுவார்..,இந்தப் பிரச்னை சீக்கிரமாகவே சரியாகிவிடும்’’ என்கிறார்கள் நம்பிக்கையாக.
”பாமக கரைந்துவிடக் கூடாது என்பதற்காக..”
அதேவேளை, ``பாமகவின் தலைவராக அன்புமணி அண்ணன் பொறுப்பேற்ற பிறகு, அவர் எடுத்த ஒருசில முடிவுகளால் கட்சி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது..,அதனால்தான் ஐயா கொஞ்சம் இழுத்துப் பிடிக்க நினைக்கிறார்..,அவர் உருவாக்கிய கட்சி கரையக்கூடாது, காணாமல் போய்விடக்கூடாது என நினைக்கிறார்.., மற்றபடி அவரை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு நிச்சயமாக இல்லை’’ என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்..,