மீண்டும் கட்சியில் சலசலப்பு? எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட ராமதாஸ்; அன்புமணிக்கு சிக்கல்?
சில மாதங்களுக்கு முன்பு பாமகவின் இளைஞரணித் தலைவராக பேரன் முகுந்தனை பாமகவின் நிறுவனர் ராமதாஸ், நியமித்ததையடுத்து நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால், அக்கட்சியின் சிறப்பு பொதுக் குழுவிலேயே இருவருக்கும் இடையே வாய் சண்டை ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பாமகவினர் தம்மை சந்தித்து ஆலோசனை நடத்த பனையூரில் தனி அலுவலகமும் திறந்தார் அன்புமணி ராமதாஸ். மோதல் முற்றிவிட்டதா என்று எண்ணுகிற வேலையில், தந்தை டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனால் அப்பாவும் மகனும் சமாதானமாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், இந்தநிலையில்தான், தற்போது ‘ நிறுவனரும் நானே, தலைவரும் நானே ’ என்று ராமதாஸ் தெரிவித்திருப்பது பாமகவில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பத்திரிக்கையாளரை சந்தித்து பேசிய நிறுவனர் ராமதாஸ், “ தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்கவே கூடாது என்று போராடியது ராமதாஸ் . பாட்டாளி மக்கள் கட்சி. எனவே, இது குறித்து யார் போராடினாலும் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு எங்களது ஆதரவு இருக்கும். அன்புமணி பாமக செயல் தலைவராக செயல்படுவார்.
பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக்கொள்கிறேன். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. காரணங்கள் பல உண்டு. எல்லாவற்றையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. " என்று தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே மீண்டும் மோதல் முற்றிவிட்டதா? என்ற குழப்பத்தில் பாமகவினர் உள்ளனர்.