”பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்டோம்”.. தவெகவில் கூட்டணியா? ஓபிஎஸ்-ன் அடுத்து மூவ் என்ன?
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைக் கூட்டி சுமார் 3 மணி நேரத்திற்கு ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம், பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டது உட்பட, 3 முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார். தவெகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கும் பன்னீர்செல்வம் மத்தியில் பதிலை சொல்லியிருக்கிறார் பன்ருட்டி ராமச்சந்திரன்.
தமிழக அரசியல் களத்தில் பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி, கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக, தமிழகம் வந்து சென்ற பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டும், அனுமதி மறுக்கப்பட்டதால், விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டார் பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பாஜகவின் பக்கமே நின்றிருந்த அவர், சமீப காலமாக தனித்துவிடப்பட்டார். அதோடு, நமது முக்கியத்துவத்தை பாஜக தேசிய தலைமை உணரவில்லையோ என்ற அதிருப்தியும் அவருக்கு இருக்கவே செய்தது. இப்படியாக இருக்க, அடுத்து என்ன என்பது குறித்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகளோடு இன்று ஆலோசனை நடத்தினார் பன்னீர்செல்வம்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த ஆலோசனையில், மூத்த தலைவர்கள் பன்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், ஓபிஎஸ் என அணியினர் அனைவரும் இடம்பெற்றனர். சுமார் 3 மணி நேரமாக நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து, மூன்று முக்கிய தீர்மானங்களை எடுத்திருப்பதாக கூறியுள்ளார் பன்ருட்டி ராமச்சந்திரன். அதன்படி, இதுநாள் வரை தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்த உரிமை மீட்புக் குழு, இப்போது அதில் இருந்து வெளியேறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார் பன்னீர்செல்வம். எந்த கட்சியுடனும் கூட்டனி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.. என்று முடிவை அறிவித்திருக்கிறார் பன்ருட்டி ராமச்சந்திரன்.
அதோடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அணி விலகியிருக்கிறது என்பதை உறுதிபட கூறி இருக்கிறார் ராமச்சந்திரன். தவெகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து எதிர்கால சூழலை வைத்தே முடிவெடுக்கப்படும் என்று பதிலளித்துள்ளார். மேலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் நீங்களும் உறுதியாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, யாரை வீழ்த்த வேண்டும் என்பது குறிக்கோள் அல்ல.. யாரையெல்லாம் வாழ்த்த வேண்டியதுதான் குறிக்கோள் என்று கூறி முடித்திருக்கிறார்..
அதோடு, பாஜகவுடனான உறவு முறிவு குறித்து கேட்கையில், பாஜக தங்களுக்கு என்ன செய்தது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.. நாடறியும்.. என்று இறுக்கமான முகத்தோடு பேசி முடித்திருக்கிறார் பன்ருட்டி ராமச்சந்திரன். தொடர்ந்து, பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அளவில் குழுவாகவே தொடர்கிறாரா அல்லது தனிக்கட்சி தொடங்குகிறாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.