இரட்டை இலை விவகாரம் | ஏப்ரல் 28ல் விசாரணை - இபிஎஸ், ஓபிஎஸ் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
செய்தியாளர்: R.ராஜிவ்
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒதுக்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் உறுப்பினர்களான புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி, ராம்குமார், சூரியமூர்த்தி சுரேவின் பழனிச்சாமி, ஓபி.ரவீந்திரநாத், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் வருகின்ற 28ஆம் தேதி இறுதி விசாரணை நடத்துகிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.
அன்றைய தினம் விசாரணையில் ஆஜராகுமாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் புகழேந்தி உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸை அனுப்பியது தேர்தல் ஆணையம். பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து ஓபிஎஸ், ஓபி.ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், கேசி.பழனிச்சாமி, சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது கடந்த டிசம்பர் மாதம் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு மனுக்கள் மீது விசாரணை நடத்த தடை விதித்திருந்தது.
தற்போது தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் நெருங்குவதால் இரட்டை இலை சின்னம் தொடர்பான மனுக்களை விரைந்து விசாரித்து முடிவெடுக்க உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், இரட்டை இலை விவகாரத்தில் 28-ம் தேதி விசாரணை நடத்த உள்ளதால் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனைத்து தாயினருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
ஏப்ரல் 28 பிற்பகல் 3 மணிக்கு அனைத்து தரப்பினரும் ஆஜராகி கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ள நிலையிலும் கிடப்பில் போடப்பட்டிருந் இரட்டை இலை சின்ன ஒதுக்கீடு வழக்கும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்த கையோடு இரட்டை இலை சின்னத்தையும் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் காய்களை நகர்த்த தொடங்கி உள்ளது எடப்பாடி தரப்பு.