போஸ்டர் ஒட்டிய தன்னால்... உங்களாலும் சாதிக்க முடியும்; GBU வெற்றி விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள்!
போஸ்டர் ஒட்டிய தன்னால் ஒரு படத்தை இயக்கி வெற்றி கொடுக்க முடியும் என்றால், உங்களாலும் சாதிக்க முடியும் என நம்பிக்கையளித்துள்ளார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்... குட் பேட் அக்லி படத்தின் வெற்றி விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... நீண்ட கால நினைவுப் பகிரல் என உணர்ச்சிப் பெருக்கில் நடந்து முடிந்திருக்கிறது, குட் பேட் அக்லி படத்தின் வெற்றி விழா.. சென்னையில் நடைபெற்ற விழாவில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். படக்குழுவுழுக்கு, வாய்ப்பளித்த இயக்குநருக்கும் நன்றி தெரிவித்து பேசிய நடிகை பிரியா வாரியர், அஜித்துடன் அடுத்த படத்தில் இணைந்தால் தனக்கு நிச்சயமாக வாய்ப்பளிக்க வேண்டும் என மேடையிலேயே கோரிக்கை வைத்தார்.
குட் பேட் அக்லி கதைக்கு தான் வில்லனாக நடிக்க அஜித்குமார்தான் காரணம் எனக்கூறிய அர்ஜுன் தாஸ், இயக்குநர் ஆதிக்கிடம் தன்னை அவர்தான் பரிந்துரை செய்தார் என்றார். அஜித் இல்லை என்றால் இந்த மாயத்தருணம் நிகழ்ந்திருக்காது என உணர்ச்சி பொங்கப் பேசினார் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்ட நடிகர் பிரசன்னா, நீண்ட போராட்டத்துக்குப்பின் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாகக் கூறினார்.
குட் பேட் அக்லி-க்கு கிடைத்த வெற்றிக்கு தனது குழுவின் பங்கும் மிக முக்கியமானது என குறிப்பிட்டார், இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ். நிகழ்ச்சியின் நிறைவாக பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தை முதன் முதலில் சந்தித்தபோது, தான் வெற்றி பெற்றவரா என பார்க்காமல், மனிதராக பார்த்ததாகக் கூறினார். இறுதியில் தனது குழுவினரை மேடை ஏற்றி அழகு பார்த்த ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு அடுத்த வேலையை தொடங்கியிருப்பதாகக் கூறி, புன்னகையோடு உரையை நிறைவு செய்தார்.