admk reacts on muruga devotees conference participated ex ministers
முருக பக்தர் மாநாடுஎக்ஸ் தளம்

”முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை” - திமுக விமர்சனங்களுக்கு அதிமுக பதில் அறிக்கை!

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்ட நிலையில், அதுகுறித்து விமர்சனம் எழுந்தது. அதற்கு தற்போது அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.
Published on

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

2026இல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில், இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக கலந்துகொண்டது ஆளும்கட்சியான திமுகவால் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அமைச்சர் ரகுபதி, ”முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது. அதிமுக என்ற பெயர் வைத்துக்கொள்வதற்கே தகுதியற்றவர்கள். திராவிடத்திற்கு எதிராகத்தான் மாநாட்டை நடத்தியுள்ளனர்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

admk reacts on muruga devotees conference participated ex ministers
muruga devotees conference x page

இதற்கு தற்போது அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அது தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும்! பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை! அவலமே உருவான ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலினின் திமுக, அதைப்பற்றி நாங்கள் நாள்தோறும் தெரிவிக்கும் மக்களின் குரலான விமர்சனங்ககளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், "Take Diversion" என்ற தனது வழக்கமான பாணியில், முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து, அஇஅதிமுக மீது அவதூறான கருத்துகளை அள்ளித் தெளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடலாம் என எண்ணுகிறது. திமுகவின் அமைச்சர் அடிபொடிகள் வரிசையாக செய்தியாளர் சந்திப்பு கொடுக்க, அறிவாலய Gatekeeper ஆர்.எஸ்.பாரதி பெயரில் வழக்கம் போலவே அறிக்கை வாந்தியையும் கக்கியுள்ளது திமுக.

admk reacts on muruga devotees conference participated ex ministers
HEADLINES : முருக பக்தர்கள் மாநாடு முதல் ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடியின் பேச்சு வரை

போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா?

’திராவிடத்தை அழிக்க முருகா வா’ என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையைத் தான் யாராவது அழித்துவிட முடியுமா? திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்திக் கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி! மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த முடியும்? திமுக-வின் இந்த விஷமப் பிரச்சாரம், நம் திராவிடக் கொள்கையையே Insecure-ஆக காட்டக் கூடிய ஒரு மோசமான Narrative. இதை செய்வதற்கு திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும். அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் திராவிடத்தை வலுவற்ற கொள்கை போல கட்டமைக்க முயலும் திமுக-வின் சதிச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

admk reacts on muruga devotees conference participated ex ministers
muruga devotees conference x page

”ஜனநாயக ரீதியாகவே இபிஎஸ் வாழ்த்து சொன்னார்”

பெரியார், அண்ணாவின் வாழ்வியல் உரத்தில் தழைத்தோங்கி நிற்கும் கொள்கையை, ஒரு மாநாடு சிதைத்து விடுமா என்ன? இல்லை, அப்படி நடக்க தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுவிடுமா? திராவிடக் கொள்கை எங்கள் குருதியில் கலந்த ஒன்று. "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற பேரறிஞர் அண்ணாவின் நெறிப்படி வாழ்பவர்கள் நாங்கள். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கக் கூடிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதால் தான், கடவுள் பக்தியை பறைசாற்ற, அமைப்பு ரீதியாக நடத்தப்பட்ட மாநாட்டிற்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் ஜனநாயக ரீதியாக வாழ்த்து தெரிவித்தார்கள்.

admk reacts on muruga devotees conference participated ex ministers
முருக பக்தர்கள் மாநாடு | விமர்சிக்கப்பட்ட அண்ணா; வருத்தம் தெரித்த ராஜேந்திர பாலாஜி..!

முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் கலந்து கொண்டது ஏன்?

எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே அந்த மாநாட்டில் கலந்துகொண்டனரே தவிர எந்தவித அரசியல் நோக்கத்திலும் அல்ல. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன். அதேபோல், அந்த மாநாட்டில், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சர்த்தில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

”பெரியார், அண்ணா கொள்கை கொண்டதே அதிமுக..திமுக எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்”

உண்மையில் அப்படிப்பட்ட வீடியோ வெளியிட்டதாக எங்கள் கவனத்திற்கு வரவோ, நாங்கள் யாரும் பார்க்கவோ இல்லை. மாநாடு முடித்து வந்த பிறகே இதுபற்றிய செய்திகள் வாயிலாக தான் நாங்களும் அறிந்து கொண்டோம். ஜாதியின் பெயரால் மக்கள் பிரிவுண்டு இருக்க, அந்த ஜாதிக்கு மூலமாக கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்ய, அந்த அரசியலை எதிர்க்கவே "கடவுள் மறுப்பு" கொள்கையை ஆயுதமாக ஏந்தினார் தந்தைப் பெரியார். பெரியாரின் கோபம் எப்போதும் கடவுள் மீது அல்ல; மாறாக, கடவுளின் பெயரைச் சொல்லி சிலரின் தவறான அரசியலால் ஏற்பட்ட கொடும் ஜாதிய பேதங்கள் மீது தான்! "நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்" என அரசையும் மதத்தையும் தெளிவாக வேறுபடுத்தி, Secularist அரசியலை முன்னெடுத்தவர், நாங்கள் பெயரில் மட்டுமல்ல, எங்கள் நெஞ்சங்களிலும் தாங்கும் இதயதெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைப் பார்வையைத் தன்னகத்தே கொண்டு, வழுவாமல் இயங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, அவதூறும் ஆபாசமும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்கள், தனது தொகுதிக்கு உட்பட்ட மிகவும் பழமைவாய்ந்த, மதிப்பிற்குரிய பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அளிக்கப்பட்ட அழைப்பினை ஏற்று கலந்துகொண்டதாகவும், ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்திவிட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

admk reacts on muruga devotees conference participated ex ministers
’இந்துக்கள் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்..’ முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள்!

ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை!!

முன்னதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில்..

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் ’அண்ணா’ பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர்.

அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ’அண்ணா’ என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதிpt desk

உங்கள் தாயை, உங்கள் மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா?

இன்றைக்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார்கள். ஒன்றிய அரசின் வருமானவரித் துறை அமலாக்கத் துறை உள்ளிட்ட அதிகாரமிக்க முட்டை, அம்மிக் கல்லையே சுக்கு நூறாக்கும். ஆளுமையில்லாத அதிமுகவை மட்டும் அது விட்டு வைக்குமா?

'நாட்டாமை' திரைப்படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை போல முருகன் மாநாட்டில் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் மிக்சர் சாப்பிட வா போனீர்கள்? 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு மட்டும் நீங்கள் வந்து விடாதீர்கள்.

அதிமுகவின் கொடியின் நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா? அந்த அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? ’மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு’ எனச் சொன்னார் பெரியார். அந்த மானத்தை இழந்து, வீரத்தைத் துறந்து, அடிமையாக வளைந்து, குனிந்து, ஒடிந்தே விட்டது அதிமுக!

1956-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெறாத ஒரு சம்பவத்தைச் சொல்லி அண்ணாவை விமர்சித்தார் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை. அதற்கு எதிர்வினை ஆற்றிய அதிமுக இன்றைக்கு எங்கே ஓடி ஒளிந்து கொண்டது?

நேற்று முருகன் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டால், இன்றைக்குக் கோவையில் RSS நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்கிறார். அடுத்து நாக்பூரில் எடப்பாடி பழனிசாமி தஞ்சம் அடைவாரா?

விஜயதசமி விழாவிற்காக கன்னியாகுமரியில் 2024 அக்டோபர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணியை அதிமுகவின் தளவாய் சுந்தரம் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததற்காக, தளவாய் சுந்தரத்தைக் கட்சிப் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார். அடுத்த மாதமே அவரை சேர்த்துக் கொண்டார். அப்படியான நாடகம் கூட RSS நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற எஸ்.பி.வேலுமணிக்கு நடக்கவில்லை. மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க கையெழுத்து இயக்கம் நடத்திய போது அதில் கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பிறகு சேர்க்கப்பட்டார். இப்படியான பாஜக பாசக் காட்சிகள் முருகன் மாநாட்டிலும் அரங்கேறியிருக்கின்றன.

மதவாத - பிரிவினைவாத அரசியல் மூலம் அதிகாரத்தைப் பிடிக்க வட மாநிலங்களில் ராமரை வைத்து கலவரம் செய்த பாஜக, தமிழ்நாட்டில் முருகனை வைத்து கலவர விதையை முருகன் மாநாடு மூலம் தொடங்கியுள்ளது. இந்துத்துவக் கும்பல் மூட்டும் கலவரத் தீயிக்கு எண்ணெய் ஊற்றும் எடுபிடி வேலையை எடப்பாடி பழனிசாமி வெட்கமே இல்லாமல் செய்திருக்கிறார்.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., பெரியார்
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., பெரியார்

“திராவிடம் பற்றி அறிஞர்களிடத்தில்தான் கேட்க வேண்டும்” என்று முன்பு சொன்னவர்தானே பழனிச்சாமி. அவர் இன்றைக்கு இந்துத்துவத்தில் முழுமையாக கரைந்துவிட்டார். திமுகவை எதிர்க்கும் மாநாடு என்கிற ஒரே காரணத்திற்காகத் திராவிடத்தை இந்துத்துவாவின் காலடியில் கொண்டு போய் வைத்துவிட்டார் பழனிசாமி. திராவிடத்தை மட்டுமா, பெரியாருக்கும் அண்ணாவுக்கு இழுக்கையும் அல்லவா தேடித் தந்துவிட்டார்.

எம்ஜிஆர் எதிர்த்த இந்து முன்னணியை இன்றைய அதிமுக சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது. 1982- ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் நடைபெற்ற மண்டைக்காடு கலவரம் பற்றியும், இந்து முன்னணி குறித்தும் எம்ஜிஆர் 29.3.1982 அன்று சட்டப்பேரவையிலேயே தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். “இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்’’ என்று அன்றைக்குச் சொன்னவர் எம்.ஜி.ஆர்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, ’சூரனை வதம் செய்த முருகா! திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா!’ என்றும் ’திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா முருக பக்தர்களே’ என்றும் இந்து முன்னணியினர் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். திராவிடத்தை அழிக்கும் முருகன் மாநாட்டிற்கு ’திராவிட’ என்ற பெயர் தாங்கிய அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி வாழ்த்து தெரிவிக்கிறார். திராவிடத்தை அழிக்கும் மாநாட்டிற்குத் திராவிடத்தால் அமைச்சரானவர்கள் கலந்து கொள்கிறார்கள். திராவிடம் அழிந்தால், அதிமுகவும் சேர்ந்தே அழியும் என்று கூட தெரியாத அளவுக்கா பாழும் கிணற்றில் அதிமுக விழுந்து கிடக்கிறது.

திராவிட இயக்கத்தின் பெயரையும் அண்ணாவின் பெயரையும் தனது கட்சியின் பெயரிலேயே வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரை எங்களது தலைவர் என்று கூறிக் கொண்டு, பாஜகவின் பாசிச அரசியலுக்குத் துணை போய்த் துரோகம் செய்திருக்கிறது அதிமுக. மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க நடக்கும் மாநாட்டிற்குத் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி அழகு பார்த்திருக்கிறார் துரோகி பழனிசாமி. கட்சியின் பெயரிலேயே அண்ணாவை வைத்துக்கொண்டு அண்ணாவை மோசமாக விமர்சிக்கும் மாநாட்டில் பங்கு கொள்ள வெட்கமாக இல்லையா?

முருக பக்தர்கள் மாநாடு
முருக பக்தர்கள் மாநாடுpt web

முருகன் மாநாடு முழுவதும் வெறுப்புப் பேச்சுக்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆந்திரத் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோர் பேசிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை எல்லாம் முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். வெறுப்பு பேச்சுகளை எல்லாம் அதிமுக ஏற்றுக் கொள்கிறது போல! “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கிற அண்ணாவின் கூற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது.

தமிழ்நாட்டு மக்களிடம் பன்னெடுங்காலமாக நிலவி வரும் சமய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் குலைக்க வேண்டும் எனும் சதி நோக்கத்தோடு பாஜகவும் இந்து முன்னணியும் நடத்திய முருகன் மாநாடு, பாஜக என்ற பாசிச எதிரிகளை மட்டுமல்ல, அடிமை அதிமுக துரோகிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

இந்தியாவிலேயே பாஜகவின் மதவெறி அரசியலுக்கு இடம் தராத ஒரே மண் தமிழ்நாடு. இங்கே எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் எனும் கலவர நோக்கத்தோடு, பல வித்தைகளை பாஜக காட்டினாலும் அவை படுதோல்வியையே சந்திக்கின்றன. அதற்குக் காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் தலைமையேற்று நடத்தப்பட்ட திராவிட இயக்கம்தான். அந்த இலட்சியப் பணியைத் தலைமையேற்று நடத்தி பாஜகவின் பாசிச அரசியலுக்கு எதிரான சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.

திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. பாஜகவின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்தத் துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com