அதிமுக கூட்டணிக் கணக்கு - சட்டப்பேரவையில் நடந்த சுவாரஸ்யம்!
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக தொடந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நடைபெற்ற ஊரகவளர்ச்சித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அதிமுக கடம்பூர் ராஜு, ’அதிமுக என்ற கட்சியே எம்ஜிஆர் திமுகவிடம் கணக்கு கேட்கப்பட்டதால்தான் தொடங்கியது. ’ என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “ கணக்கு கேட்டு கட்சி ஆரம்பித்த நீங்கள் தற்போது தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.” என்றார் .
பதிலளித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, “ 2026ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து புதிய கணக்கை எடப்பாடி பழனிசாமி தொடங்குவார். ” என்றார்.
தொடர்ந்து பேசிய, அதிமுக எஸ்பிவேலுமணி, “ எம் ஜி ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டிக் கழித்து பார்த்தால் அவர் போடும் கணக்கு சரியாக வரும்” என்றார்.
அமைச்சர் ஐ பெரியசாமி பேசுகையில்... ‘ கடந்த ஆட்சியின் போது தாய் திட்டத்தை கைவிட்டதன் மூலம் தாயையே அதிமுக மறந்துவிட்டது .’
அதிமுக எஸ் பி வேலுமணி , ” தாய் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. எங்களை எல்லாம் வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை எந்நாளும் நாங்கள் மறக்க மாட்டோம்” என்றார்.
நேற்றைய தினம் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமித்ஷாவை சந்தித்திருக்கும் நிலையில், இன்று பல ஸ்வாரஸ்ய சம்பங்கள் சட்டப்பேரவையில் நடந்து வருகிறது.
கூடுதலாக, சில நாட்களுக்கு முன்பாக, அதிமுகவின் தொண்டர்களின் எதிர்காலத்திற்கான கூட்டல் கழித்தலில் ஏமாறாமல் இருந்தால் அதற்கு தன் வாழ்த்துக்கள் என கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், இன்றும் அதன் தொடர்ச்சியாக விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.