”யாரையும் கூட்டணிக்கு அழைத்து நான் பேசவேயில்லை..” - புது விளக்கம் கொடுத்த இபிஎஸ்!
செய்தியாளர் - சுப.முத்துப்பழம்பதி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்னணி அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரமாக சுற்றி சுழன்று தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் திமுக அரசானது ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை கையில் எடுத்து மின்னல் வேகத்தில் செல்லும் நிலையில் அதிமுகவும் அதற்கு டஃப் கொடுக்கும் வகையில் பரப்புரையை கையில் எடுத்துள்ளது. அதாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் கடந்த 7-ந்தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அதன்படி முதற்கட்டமாக கோவை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 33 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்டமாக ஜூலை 24-ந்தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்தப் பயணத்தில் ஆகஸ்டு 8-ந்தேதி வரை 7 மாவட்டங்களில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு இபிஎஸ் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் - இபிஎஸ் நம்பிக்கை
புதுக்கோட்டையில் இரண்டாவது நாளாக சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
எடப்பாடி பழனிசாமி பேசியதன் விவரம்:-
46 சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு சுமார் 15 லட்சம் பொதுமக்களை சந்தித்துள்ளேன். மக்களுடைய வரவேற்பு, ஆரவாரம், முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நாங்கள் அமித்ஷாவை சந்தித்தது தப்பா...? அப்படினா நீங்க..?
தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பிரதமர் மோடியின் வீட்டு கதவை தட்டினார்களே.. அவர்கள் கதவை தட்டினால் சரி, நாங்கள் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தால் தப்பு. இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் தானே அமித்ஷா. அவர் வேறு யாரும் இல்லையே. இதில் என்ன தவறு இருக்கின்றது என்று புரியவில்லை. அதிமுக பாஜக கூட்டணியை வெளியில் இருந்து பேட்டி கொடுப்பவர்கள் தான் உடைக்க நினைக்கின்றனர். பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இருப்பதாக கூறுகிறார் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அதிமுக பாஜக கூட்டணி என்பதை நாங்கள் தெளிவு படுத்தி விட்டோம்.
யாரையும் கூட்டணிக்கு நான் அழைக்கவில்லை !
விசிக, தவெக, சீமான் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து எங்கேயாவது நான் வெளிப்படுத்தி உள்ளேனா... 46 சட்டமன்ற தொகுதிகளிலும் பேசியுள்ளேன் பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளேன். எங்கேயாவது நான் கூட்டணிக்கு அவர்களை அழைத்தேனா. அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள கூறியதை எல்லாம் கேள்வியாக கேட்டால் யூகத்தின் அடிப்படையில் கேட்கின்ற கேள்விக்கு பதில் கூற முடியாது. பெரிய கட்சி கூட்டணிக்கு வரும்போது நானே கூறுகின்றேன்.
99% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றிவிட்டதா? பொதுமக்களே மார்க் போடட்டும்..
2021 இல் திமுக சார்பில் 525 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்துள்ளார்கள். அவர்கள் தற்போது சொல்வது 99 சதவீதம் அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியிடுகின்றனர். நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறினால் தப்பு என்று சொல்கின்றனர். அதனால்தான் பொதுமக்களை நேரடியாக திமுக சொன்ன வாக்குறுதிகளில் சிலவற்றை கொடுத்து பொதுமக்களையே மதிப்பிட சொல்கின்றோம். மக்களே இதற்கு முடிவு சொல்லட்டும். மக்கள் தான் நீதிபதிகள் மக்கள் தான் ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். விருப்பப்பட்டால் அதை பூர்த்தி செய்து மீண்டும் எங்களிடம் கொடுக்கட்டும் இல்லையென்றால் அவர்களை வைத்துக் கொள்ளட்டும். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
சர்வாதிக்கார ஆட்சிபோல் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது..!!
மக்களுடைய பிரச்னை தெரியாத அரசாங்கமாகத்தான் இந்த அரசாங்கம் இருக்கிறது. ஒரு கிராமத்தில் வீடு கட்டும் பொழுது அனுமதி வாங்குங்கள் என்று சொல்வது தப்பில்லை. கட்டட அனுமதி வாங்கவில்லை என்றால் உடனடியாக சீல் வைக்க வேண்டும் என்று கூறுவது இதுவரை நடைமுறையில் இல்லை. புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். மக்களுக்கு முதலில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிறகுதான் நடைமுறைப்படுத்த வேண்டும். உடனடியாக எடுத்தவுடன் சர்வாதிகார ஆட்சி போல் செய்யவில்லை என்றால் சீல் வைப்பேன் என்று கூறுவது ஏழை மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
கிராமத்தில் உள்ள விவசாயிகள் எல்லாம் படித்தவர்கள் அல்ல. அதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். முறையாக அறிவிப்பு கொடுத்து அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். அதை விடுத்து தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று மமதையில் இது போன்ற அறிவிப்பை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது” என்று பேசினார்.