நவ.5 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. கே.பழனிசாமி அறிவிப்பு!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கபட்டிருக்கும் நிலையில், நவம்பர் 5ஆம் தேதி அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் மரியாதை செலுத்தினர். அப்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.செங்கோட்டையன் இருவரும் இணைந்து ஒரே வாகனத்தில் பயணித்தனர். தொடர்ந்து, செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவையும் சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில்தான், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியின் விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவரை அக்கட்சியின் உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளிலும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் பொதுச்செயலாளர் கே.பழனிசாமி. இந்நிலையில், அதிமுகவின் உட்கட்சிப் பூசல் மீண்டும் உச்சத்திற்கு வந்திருக்கிறது.
இந்நிலையில்தான், நவம்பர் 5ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிமுகவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 5.11.2025 புதன் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

