அனைத்துக் கட்சிக் கூட்டம்| ”S.I.R. பணிகளை நிறுத்தாவிட்டால் வழக்கு..” தலைவர்கள் பேசியது என்ன..?
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை நிறுத்தாவிட்டால் வழக்கு தொடர்வது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், வாக்காளர் பட்டியல் திருத்தம் அவசரமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. வாக்குரிமையை பறிக்கும் முயற்சியாக இதை கண்டிக்கின்றன.
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை தொடங்கவிருப்பதாக, கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அவசரகதியில் எஸ்.ஐ.ஆர் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று சென்னை தி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பாமக அண்புமனி ராமதாஸ் தரப்பு, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 20 கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 4ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கவுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொண்டால், தேவையான ஆவணங்களை மக்கள் கொடுப்பதில் சிக்கல் இருக்கும் என திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கவலை தெரிவிக்கின்றன. எஸ்.ஐ.ஆர் பெயரில், வாக்காளர்களை நீக்க முயற்சிகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
”வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம்” - முதல்வர் ஸ்டாலின்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழகம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது.
நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை, ஆனால் அதற்காக உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும், பதற்றமில்லாத சூழலில் அதை செய்ய வேண்டும், அப்போது தான் அந்த பணிகளை முறையாக செய்ய முடியும் மாறாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்த பணிகள் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே என பார்கிறோம். அதை தான் பிகாரில் செய்தார்கள், இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்ய நினைக்கிறார்கள். அதனால் தான் அதனை எதிர்க்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்க ஜனநாயக குரலைக் காக்க வரைவு தீர்மானத்தை முன் வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ” வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது வாக்குரிமையை குறிவைத்து நிகழ்த்தப்படுகிற ஒரு தாக்குதல் அல்ல, குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படுகிற ஒரு தாக்குதல்” என விமர்சித்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும் போது, “ ஜனநாயகத்தின் ஆணிவேரையே அறுக்கும் செயலாக மத்திய அரசின் ஏவுதலில் தேர்தல் ஆணையமே SIR யை முன்னெடுத்துள்ளது” என தெரிவித்தார்.
இந்நிலையில் தான் இந்தக் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அப்படி நிறுத்தி வைக்காவிட்டால் வழக்கு தொடர்வது எனவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

