அப்போது இருந்த போராட்ட குணம் இப்போது உங்களுக்கு எங்கே போனது - முதல்வரை நோக்கி ஆதவ் அர்ஜூனா கேள்வி
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அரங்கேறிய காவல் மரணங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதிக் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று (13.7.2025) மயிலாப்பூர் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. தவெகவினர் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள நிலையில், பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கருப்பு சட்டை அணிந்து 'சாரி வேண்டாம், நீதி வேண்டும்' என்ற பதாகையை கைகளில் ஏந்தியபடி கலந்து கொண்டுள்ளார் தவெக தலைவர் விஜய். அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “ நீங்கள் ஜெயராஜ் பென்னிஸ் மரண வழக்கில், மக்கள் முன்பு கடும் போராட்டம் நிகழ்த்தினீர்கள். அப்போதையை முதல்வர் அவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டபோது, தமிழ்நாடு காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினீர்கள். அப்போது இருந்த போராட்ட குணம் இப்போது உங்களுக்கு எங்கே போனது.
எதிர்கட்சித்தலைவராக இருந்த போது மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த நீங்கள் முதலமைச்சராக இருக்கும்போது ஏன் அதை செய்யவில்லை. எங்கிருந்த இது தெரிந்தது என்றால், அஜித் குமார் மரணமடைந்த போது வலிப்பு நோயால் இறந்துவிட்டார் என்று கூறினார்கள். அஜித்தின் அம்மாவிடம் ’சாரிமா’ என்று கூறினீர்கள். உங்கள் தேர்தல் நாடகம் அங்குதான் வெளிப்பட்டது.
அது என்னவென்றால், மதுரை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்து விசாரித்து உண்மையை வெளிக்கொணர்ந்து வந்தபோது சாரி கூறினீர்கள். ஜெய்பீம்படத்தை பார்த்து அழுதேன் என்று கூறினீர்கள் . உண்மையை பார்த்து அழுவது உங்கள் வேலை இல்லையே. ” என்று தெரிவித்துள்ளார்.