25 ஆண்டுகளுக்குப் பின் பாஜகவிலிருந்து விலகும் கௌதமி... என்ன காரணம்..?

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரும் நடிகையுமான கௌதமி பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்து மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கும் மற்றும் மத்திய பாஜக தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
நடிகை கௌதமி
நடிகை கௌதமிமுகநூல்

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரும் நடிகையுமான கௌதமி பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகுவதாக தெரிவித்து மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கும் , மத்திய பாஜக தலைவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருக்கிறார்.

மேலும் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும் அழகப்பன் என்பவருக்கும் எதிராக குற்றம் சாட்டி ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கௌதமி
நடிகை கௌதமிமுகநூல்

அவர் எழுதிய கடிதத்தில் இது குறித்து குறிப்பிடுகையில், “மிகவும் கனத்த இதயத்துடனும், ஆழ்ந்த ஏமாற்றத்துடனும் நான் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் என் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு இக்கட்சியில் சேர்ந்தேன். என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட அனைத்து சவால்களிலும் கூட, இக்கட்சியை விட்டு நான் விலகவில்லை.ஆயினும், இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன். கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. அவர்களில் பலர் என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து என் வாழ்நாள் சம்பாத்தியத்தை ஏமாற்றிய நபருக்கு உதவுகிறார்கள், ஆதரிக்கிறார்கள்.

நான் 17 வயதிலிருந்தே பணிபுரிந்து வருகிறேன். 37 வருடங்களாக சினிமா, தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன்.எனது வாழ்நாள் முழுவதும் நான் உழைத்து சேமித்த பணத்தை என் மகளின் எதிர்காலத்திற்காக வைத்திருந்தேன்.

 நடிகை கௌதமியின் கடிதம்
நடிகை கௌதமியின் கடிதம் முகநூல்

அதற்காக அப்பணத்தை திரு. சி.அழகப்பனிடம் வழங்கினேன்.ஆனால் அவர் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை என்று அனைத்தையும் மோசடி செய்து ஏமாற்றி விட்டார்.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன். சமீபத்தில்தான் அவர் மோசடி செய்ததை நான் கண்டுபிடித்தேன். என்னையும் என் மகளையும் அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக ஏற்பது போல நடித்து பாசாங்கு செய்துவிட்டார்.

இருப்பினும் ஒரு இந்திய குடிமகளாக சட்டங்கள், விதிகள் மற்றும் செயல்முறைகளை பின்பற்றி நான் உழைத்து சம்பாதித்த பணம், சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை நான் நிச்சயம் மீட்டெடுப்பேன். எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். முதலமைச்சர் மீதும், காவல் துறை மீதும், நீதித்துறை மீதும் முழு நம்பிக்கை வைத்து, புகாரை அளித்துள்ளேன்.

2021ம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, ​​ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சிக்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து உழைத்தேன். எனக்கு அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகவும் உறுதியளித்தனர்.

எனவே ராஜபாளையம் மக்களுக்காகவும், அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்துவதற்காகவும் என்னை அர்ப்பணித்தேன். இருப்பினும் கடைசி நிமிடத்தில் ஏமாற்றிவிட்டனர்.

நடிகை கௌதமி
பல பெண்களிடம் ரூ.14 லட்சம் ரூபாய் மோசடி.. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் நிர்வாகி கைது!

25 வருடங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்தும், பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் கடந்த 40 நாட்களாக திரு.அழகப்பனுக்கு உதவி வருகின்றனர். இருப்பினும் முதலமைச்சர், காவல் துறை மற்றும் நீதித்துறை போன்றவர்கள் மூலம் எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் இன்று இந்த ராஜினாமா கடிதத்தை மிகுந்த வேதனையிலும் வருத்தத்திலும் எழுதுகிறேன். ஆனால் மிகவும் உறுதியுடன் எனக்கும் என் குழந்தையின் எதிர்காலத்துக்கும் ஒரு தனிப் பெண்ணாகவும் ஒற்றைப் பெற்றோராகவும் இருந்து நீதிக்காகப் போராடுவேன் என்றும் தெரிவித்து கொள்கிறேன். “ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com