விஜயகாந்த் மறைவு தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள காணொளியில், “தற்போதுதான் எனக்கு தெரிந்தது அண்ணன் இறந்த செய்தி. அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்!. நான் இந்த நேரத்தில் உங்களுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன். இது என்னுடைய தவறுதான்.
நல்லது செய்வது சாதாரண செயல் இல்லை. அதை நான் உங்களிடத்தில் இருந்துதான் கற்றுக்கொண்டேன். நான் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். யாராவது உங்களது அலுவலகத்திற்கு பசியோடு வந்தால் அவர்களுக்கு உணவு அளித்துதான் அனுப்புவீர்கள் என்று. அதேபோலதான் நானும் செய்ய வேண்டும் என்று இறங்கினேன்.
எவ்வளவோ உதவிகளை இந்த சமுதாயத்திற்கு நீங்கள் செய்திருக்கிறீர்கள். இன்றைக்கு அரசியல்வாதியோ, முன்னாள் நடிகர் சங்க தலைவரோ இறந்ததை விட நல்ல மனிதரை இழந்துவிட்டோமே என்ற இழப்புதான் எனக்கு. நடிகர் சங்க தலைவராக நீங்கள் நடத்திய நிர்வாகம், அரசியல்வாதியாக, நல்ல நடிகராக நீங்கள் எவ்வளவோ பெயர் வாங்கியிருக்கிறீர்கள். ஆனால் ஒரு மனிதனாக பெயர் வாங்குவது சாதாரண விஷயம் இல்லை. அதை நீங்கள் செய்திருக்கிறீர்கள்” என்று கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.