”விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார்” - பிரவீன் சக்கரவர்த்தி.!
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து ஆட்சியில் பங்கு என்னும் குரல்கள் எழுந்து வருகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு அணித் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்துப் பேசியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமை தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் தான் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் தரவுப் பகுப்பாய்வு அணித் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும் ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை. 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பலவீனமாகவே சென்று கொண்டிருக்கிறது. தற்போது, காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்காக இந்தக் கோரிக்கை வைக்கப்படுகிறது. கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை தான் எடுக்கும்; ஆனால், கூட்டணி குறித்தான கோரிக்கைகளை தொண்டர்கள் வைக்கலாம்.
தவெக தலைவர் விஜயை நான் சந்தித்தேன். அதிலென்ன பிரச்னை இருக்கிறது?.. அதுகுறித்து என்னால் இப்போது பேச முடியாது. தவெக தலைவர் விஜய் ஒரு அரசியல் தலைவராக மாறியுள்ளார். நடிகர் விஜயை பார்க்க மக்கள் கூட்டம் வரவில்லை. தலைவர் விஜயைப் பார்க்கவே மக்கள் கூட்டம் வருகிறது. இதன்மூலம் களத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

