ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. நாளை முதல் அமல்.. நிர்வாகம் அளித்த விளக்கம்!!
ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகளான நெய், வெண்ணெய் தயிர் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட 67 பொருட்களின் விலையை உயர்த்தி தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் இணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் (அக்டோபர் 28) அமலுக்கு வரவிருக்கிறது. ஆவின் மேலாண்மை இயக்குநர் எஸ். சிவராசு, ஐ.ஏ.எஸ்., வெளியிட்டுள்ள உத்தரவின்படி, திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்தவிவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எரியும் விலைவாசி உயர்வுத் தீயில் தமிழக அரசு மேலும் எண்ணெய் ஊற்றுவதா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தச்சூழலில் தான், விலையேற்றம் ஏன்? என்பது குறித்து ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில், ”உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆவின் பால் உபபொருட்களின் விலைகளில் குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலை உயர்விற்குப் பின்னரும், பிற கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களின் பொருட்களுடன் ஒப்பிடுகையில், ஆவின் உபபொருட்களின் விலை தொடர்ந்து குறைவாகத்தான் உள்ளது. இந்த விலை திருத்தம் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும். இது பால் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், நுகர்வோருக்கு தரமான பால் உபபொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்” எனத் தெரிவித்துள்ளது.

