விசிக-வின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம் - யார் இவர்? பின்னணி என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனை நியமனம் செய்து தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தொல்.திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா
தொல்.திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா PT WEB

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் நவீனத்துவ மாற்றங்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்ட பிரபல தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜுனாவை விசிக-வின் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

யார் இந்த ஆதவ் அர்ஜுனா?

கடந்த ஒரு வருடத்தில் விசிக-வில் நிகழ்ந்து வரும் பல்வேறு மாற்றங்களுக்கும், திருமாவளவனுக்குப் பக்கபலமாகவும் செயல்பட்டு வருபவர் தான் Voice Of Commons நிறுவனத்தின் தலைவர் ஆதவ் ஆர்ஜுனா.

திமுகவுக்குத் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த ஆதவ் அர்ஜுனாவை விசிகவின் பக்கம் திருமாவளவன் அழைத்து வந்ததே கட்சியைப் பலப்படுத்தவும், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யவே என்று விசிக-வில் ஒரு பேச்சு இருந்து வந்தது. திருமாவளவனின் எண்ணத்தை நன்கு உணர்ந்தவரான ஆதவ் ஆர்ஜுனா, திருச்சியில் நடந்த மாநாட்டில், விசிக-வின் அடிப்படை உறுப்பினராக தம்மை இணைத்தும் கொண்டார்.

பின்னர் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஆதவ் அர்ஜுனாவின் திறமைகள் குறித்து திருமாவளவன் பல தருணங்களில் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். கட்சியின் வளர்ச்சிக்குத் துடிப்பாகச் செயல்படக்கூடிய வகையில் இளைஞராகவும், அரசியல் நுண்ணறிவு கொண்டவராகவும், தேர்தல் வியூக நிபுணராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவராகவும் உள்ள ஆதவ் அர்ஜுனாவைத் தனது கட்சியின் செயல்பாடுகளில் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள திருமாவளவன் திட்டமிட்டார். அதன் அடையாளமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பான துணை பொதுச் செயலாளர் பதவியை தற்போது ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கியிருக்கியுள்ளார் திருமாவளவன்.

தொல்.திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா
மீண்டுமொரு ஜார்ஜ் ஃப்ளாய்ட்.. அமெரிக்காவில் தலைவிரித்தாடும் இனவெறி.. அதிர வைக்கும் வீடியோ!

பொதுத்தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா?

வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளையாவது திமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 தொகுதிகளில் 2 தனித் தொகுதிகளுடன் ஒரு பொதுத் தொகுதியும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் விசிக, திமுகவிடம் உறுதியாக எடுத்துரைத்துள்ளது எனத் தெரிகிறது. பொதுத் தொகுதியாக பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சி இரண்டில் ஒன்றைக் கண்டிப்பாக ஒன்றைப் பெறும் முடிவில் விசிக உறுதியாக உள்ளது. 

அந்த பொதுத்தொகுதியில்  ஆதவ் அர்ஜுனாவை  வேட்பாளராகக் களமிறக்க விசிக திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் கடந்த ஒரு வருடங்களாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து பயணித்து வருவதால் கட்சியினர் மத்தியிலும் அவருக்கு நல்ல பெயர் உள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.கவுடனும் ஏற்கனவே இணைந்து பணியாற்றியவர் என்பதால் ஆதவ் அர்ஜுனாவிற்கு தி.மு.க. தரப்பும் ஆதரவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுத்தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவைக் களம் இறக்கினால் எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என திருமாவளவன் எண்ணுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானால் தான் இவையெல்லாம் உறுதியாகும்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விசிக-வின் சார்பில்  பொதுத்தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவைக் களமிறக்கி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற விசிக  தயாராகி  வருகிறது. அதன் முன்னோட்டமாகத் தான் கட்சியின் முக்கிய பதவியான துணைப்பொதுச்செயலாளர் பதவியை ஆதவ்  அர்ஜுனாவிற்கு வழங்கி அழகு பார்த்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தொல்.திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா
பழனி முருகன் கோவில் கிரிவல வீதியில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை - நீதிமன்ற உத்தரவு முழுவிவரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com