பழனி முருகன் கோவில் கிரிவல வீதியில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை - நீதிமன்ற உத்தரவு முழுவிவரம்

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரிய வழக்கில் முக்கிய உத்தரவு.
பழனி
பழனிPT

திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், பழனி முருகன் கோயில் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

  • பழனி கிரி வீதியில் எந்தவிதமான தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை

  • திருப்பதியை போல பக்தர்களை அழைத்து செல்ல கிரி வீதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

  • இதுகுறித்த விரிவான அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்ன என்பதை பார்க்கலாம்.

”பழனி முருகன் கோவில் உலகப்பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனு செய்திருந்தார்.

NGMPC22 - 147

ஏற்கனவே இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது:

”பழனி கோவில் நிர்வாகம் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோவில் கிரிவல வீதிகளில் வாகனங்கள் உள்ளே செல்வதை தடுக்கும் வகையில் 9 இடங்களில் இரும்பு தூண்கள் மற்றும் தள்ளும் வகையிலான தடுப்புகள் அமைக்கும் பணி 2 வாரங்களில் முடிவடையும்.

அதிகாரிகளின் வாகனங்கள் கொடைக்கானல் சாலை வழியாக கோயிலுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் முறையாக சர்வே செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கபட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

  • பழனி முருகன் கோவில் கிரிவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாத அளவிற்கு நிரந்தர தீர்வுகள் ஏற்படுத்த வேண்டும்.

  • மேலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்து செல்ல கிரிவல வீதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • தற்காலிகமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும், எந்த விதமான தனியார் வாகனங்களும் கிரிவீதிக்குள் வர அனுமதி இல்லை.

NGMPC22 - 147
  • கிரி விதிகளில் உரிய முறையில் சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்பு செய்யாத அளவிற்கு சம்மந்தப்பட்ட அரசுத்துறைகள் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • சிறிய ஆக்கிரமிப்புகளை கண்டறியும் வகையில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்

என உத்தரவிட்ட நீதிபதிகள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்துவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com