பட்டப் பகலில் ஏடிஎம்-ல் திருடிய ‘டிப் டாப்’ ஆசாமி - சிசிடிவி வீடியோ
ராசிபுரத்தில் பட்டப் பகலில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழையபேருந்து அருகே ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் கைவரிசையை காட்டியுள்ளார். பட்டப் பகலில் உள்ளே சென்று சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 16 பேட்டரிகளை அவர் திருடியுள்ளார். அத்துடன் திருடிய பேட்டரிகளை ஆட்டோவில் எடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து வங்கி நிர்வாகம் புகார் தெரிவிக்கவே, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, அந்த நபர் பேட்டரிகளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவர் ஆட்டோ ஓட்டுநரிடம் தான் ஒரு ஏடிஎம் சர்வீஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றியிருக்கலாம் என காவல்துறையினர் கணித்துள்ளனர். ‘டிப் டாப்’ ஆக அதிகாரி போல் வந்துள்ள அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.