“சிஏ படிக்கணும்னு ஆசை!” - சாதிவெறி தாக்குதலை உடைத்தெறிந்து கல்வியில் ஜொலித்த மாணவர் சின்னதுரை!

நாங்குநேரி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சின்னத்துரை மாணவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவர் சின்னத்துரை
மாணவர் சின்னத்துரைpt web

தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பள்ளிப்புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டிருக்கும். ஆனால், அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை மாணவர்கள் புரிந்துள்ளனரா? என்பதும், அப்படி புரிந்துகொள்ளவில்லை எனில் அவர்களை புரிந்துகொள்ள செய்யாமல் செய்வது சமூகத்தின், அரசின், ஆட்சியின் அல்லது ஆசிரியர்களின் பிழையா அல்லது பெற்றோர்களின் பிழையா என்பது தொடரும் விவாதம். ஆனால், பெரும்பாலானவர்கள் அதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மைதான் என்பதை தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

நாங்குநேரி சம்பவம்

திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் முனியாண்டி, அம்பிகாபதி. இத்தம்பதியரின் மகன் சின்னதுரை (17). வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சின்னதுரை பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க, அவரது தங்கை சந்திராசெல்வி (14) ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 8 ஆம் வகுப்பு வரை சாத்தான் குளம் அருகே உள்ள முதலூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்த சின்னதுரை 9 ஆம் வகுப்பு முதல் வள்ளியூரில் பயின்று வந்துள்ளார்.

நன்றாக படிப்பவர், அமைதியானவர், படிப்பைத் தவிர வேறு விஷயங்களில் தலையிடாதவர். திடீரென சின்னத்துரை பள்ளிக்கு வராமல் போகவே, பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னத்துரையின் தாயிடம் விசாரித்துள்ளார். தாய் சின்னத்துரையிடம் விசாரிக்க முதலில் ஏதும் இல்லை என்று மறுத்தவர், பின் குடும்பமாக சேர்ந்து கேட்டபோது, அவனுடன் பள்ளியில் படிக்கும் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களால் நடந்த கொடுமைகளைக் கூறியுள்ளார். இதன் பின்னரே இந்த விவகாரம் தாயின் மூலமாக பள்ளிக்குத் தெரியவந்துள்ளது.

சின்னத்துரை மற்றும் அவரது தாய் இருவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைத்து பேச, நடந்ததை கடிதமாக எழுதி தரச்சொல்லியுள்ளார் தலைமை ஆசிரியர். தனக்கு நடந்த ஒட்டுமொத்த அநீதிகளையும் எழுதிக் கொடுத்துள்ளார். அதன்மூலமாகவே சின்னத்துரை எத்தகைய இன்னலுக்கு ஆளாகியுள்ளார் என்பதும் பள்ளிக்குத் தெரியவந்துள்ளது. கடிதம் எழுதிக் கொடுத்த அந்த இரவே, அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்தது அந்த கொடூரம்.

வீடுபுகுந்து வெட்டிய கும்பல்

இரவு 10 மணிக்கு சின்னத்துரையின் வீட்டில் அவருடன் அவரது தாய், தங்கை என சாப்பிடுவதற்குத் தயாரான நிலையில், வீட்டிற்குள் மூன்று பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது. கும்பல் என்பதை விட மூன்று மாணவர்கள். அவர்களது கையில் இரண்டடி நீள அரிவாள். சின்னத்துரையின் மீது கண்மூடித்தனமான தாக்குதல். அப்போது அவரைத் தடுக்கச் சென்ற தங்கை சந்திரா செல்வியையும், ஒரு முதியவரையும் வெட்டியுள்ளனர். முதியவர் இறந்துவிட ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்னத்துரை அவரது தங்கை இருவரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கூர் நோக்கு இல்லங்களில் சேர்க்க ஆசைப்படவில்லை

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இந்த சம்பவம். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விபரீதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “உங்கள் புத்தியை கூர்மைப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நாங்கள் ஆனால் உங்களை கூர்நோக்கு இல்லங்களுக்கு சேர்க்க ஆசைப்படவில்லை. ஆனால் ஒரு சில சம்பவங்கள் எங்களை மிகவும் பாதிப்படைய செய்வதுடன் சோர்வடையவும் செய்ய வைத்துவிடுகிறது” என தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதுதொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், “இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்திருந்தார்.

ஜாதி ஆதிக்க மனோபாவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்விக்கு தமிழ்நாடு அரசு உதவும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து கல்வியை மேற்கொள்ளும் வகையில் காலாண்டு தேர்வு எழுதுவதற்கு சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவமனையிலேயே பாதிக்கப்பட்ட அண்ணனும் தங்கையும் தேர்வு எழுதினர்.

பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்

பாதிக்கப்பட்ட மாணவர்களின் மொத்த படிப்பு செலவையும் அரசு ஏற்றுள்ள நிலையில், தமிழ்நாடு நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யும் ஆணையையும் வழங்கியது. இதற்கான ஆணைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

சின்னதுரை
சின்னதுரை புதிய தலைமுறை

இந்நிலையில் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. 600 மதிப்பெண்களுக்கு, 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தமிழிலில் 71 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 93 மதிப்பெண்களும், கணிப்பொறி பயன்பாட்டில் 94 மதிப்பெண்களும் வணிகவியலில் 84 மற்றும் கணக்குப்பதிவியலில் 85 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

புதிய தலைமுறையிடம் அவர் கூறியதாவது, “பி.காம் முடித்துவிட்டு சிஏ பண்ண வேண்டும் என ஆசைப்படுகிறேன். இதற்கு பின் வேறு எங்கும் சாதிய வன்கொடுமை வரக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

“என்றும் துணை நிற்பேன்” அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவரது கல்விக்கு துணை நிற்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அவர், “நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன்” என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மேற்கோள் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். அதில், “கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் - மு.க” என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல் சம்பவம் என்பது இதுவே முதலும் கடைசியுமானது அல்ல. பள்ளி, கல்லூரிகளில் பட்டியலின மாணவர்கள் மேல் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை தாக்குதலும் சாதாரணமாக கடந்துவிடக்கூடியது அல்ல.

ஆதிக்க சாதி மனப்பாண்மை கொண்டவர்கள் ஆயுதமாக அரிவாளை எடுத்தாலும், நாம் நமக்காக எடுக்கும் ஆயுதமாக கல்வி ஒன்றே இருக்க வேண்டும் என்பதற்கு சின்னத்துரையும் ஓர் சாட்சி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com