யார் இந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா..? சிறப்பு தொகுப்பு!
ஒரு சமூகம் தன் முன்னோர்கள் வரலாற்றை, கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள துணை நிற்பது முற்கால இலக்கியங்கள். அந்த வகையில் தமிழ்ச் சமூகத்தின் பழங்கால வரலாற்றை பிற்கால சந்ததியினர் அறியத் தந்தவர் உ.வே. சாமிநாதர்.
இன்று தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாதரின் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். இந்த சூழலில், தமிழ்த் தாத்தா பற்றிய நினைவலைகளை திரும்பிப் பார்ப்போம்.
அச்சு வடிவில் தமிழை தழைத்தோங்க செய்தவர்..
“கைத்தொழில் கொடுத்துங் கற்றல் கற்றபின் கண்ணுமாகும் மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கோர் துணையு மாகும் பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் புகழுமாம் துணைவியாக்கும் இப்பொருள் எய்தி நின்றீர் இரங்குவ தென்னை என்றான்”
தமிழில் முதன் முதலில் முழுக்க விருத்தப்பாக்களால் அமைந்த சீவக சிந்தாமணியில் வரும் இந்தப் பாடல் எத்தனை கவிநயத்தோடு கல்வியை போற்றுகிறது.
சைவம் அதிகம் தழைத்தோங்கியிருந்த பாண்டி நாட்டினிலே சமணமும் சமம் பெற்றிருந்தது என்பதை உணர்த்தும் திருத்தக்கதேவரின் இந்த நூல் தமிழர்களுக்கு கிடைத்தது என்றால் அதற்கு காரணம் உ. வே. சா. சிலம்பும், மணிமேகலையும் அச்சு வடிவில் வந்ததற்கு காரணமும் அவரே.
தமிழ்த்தாத்தா ஆனது எப்படி?
தன்வாழ்நாளில் பெரும்பகுதியை ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடி அதனை ஆய்வு செய்து பதிப்பித்து வெளியிட்ட சாமிநாதர் 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரத்தில் பிறந்தவர்.
ஆரம்பக் கல்வியை பிறந்த ஊரிலேயே பயின்ற அவர் தமிழைப் பழுதறக் கற்கும் பொருட்டு தஞ்சைக்குச் சென்றார். அங்கிருந்துதான் அவரது வாழ்க்கைப் பயணம் தமிழ்த் தொண்டு நோக்கி திரும்பியது என்று சொல்லலாம்.
கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியில் இருந்தபோது தொடங்கிய ஓலைச்சுவடிகள் தேடும் பணியானது அவரது இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது.
ஆற்றுப்படை நூல்கள், புராண நூல்கள் என சுமார் 90க்கும் மேற்பட்ட நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து படியெடுத்து பதிப்பித்து தந்துள்ள சாமிநாதர் தமிழறிஞர்களால் தமிழ்த் தாத்தா என போற்றப்படுகிறார்.
முனைவர் பட்டம் வழங்கிய சென்னை பல்கலைக்கழகம்..
அற்புதமான எழுத்தாற்றல், நகைச்சுவை இழையோடும் ஆற்றொழுக்கான பேச்சாற்றல் கொண்ட சாமிநாதருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் 1932 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. இவரது பேச்சைக் கேட்ட தேசப்பிதா இவரிடம் தமிழ் பயில ஆசை கொண்டார் என்பது இவரது பேச்சாற்றலுக்கு சான்றாகக் கூறப்படும் ஒன்று.
தேடித்தேடிச் சேர்த்த ஓலைச்சுவடிகளை பாதுகாத்தளித்த தமிழ்த் தாத்தா 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 28இல் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், சிலப்பதிகாரப் பாடல்களாக, திருமுருகாற்றுப்படை பாடல்களாக தமிழ் கூறும் நல்லுலகில் வாழ்ந்தே வருகிறார்.