“நாங்கள் என்ன ராமருக்கு எதிரியா?” - உண்மையில் ஆ.ராசா பேசியது என்ன? எழுந்த விமர்சனமும் முழுபேச்சும்!

ராமர் குறித்தும் இந்தியா குறித்தும் திமுக எம்.பி. ஆ.ராசா பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் INDIA கூட்டணி கட்சிகளும் கடுமையான எதிர்வினைகளை தெரிவித்து வருகின்றன. உண்மையில் அவர் பேசியது என்ன?
ஆ.ராசா
ஆ.ராசாpt web

“நீங்கள் சொல்லுகிற கடவுள் இந்தக் கடவுள் என்றால், இதுதான் ஜெய் ஸ்ரீ ராம் என்றால், இதுதான் பாரதமாதாவிற்கு ஜே என்றால் அந்த ஜெய் ஸ்ரீ ராமையும், பாரதமாதாவையும் ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது” இது திமுக எம்பி ஆ ராசா பேசிய காணொளியின் முன்னும் இல்லாத பின்னும் இல்லாத ஒரு பகுதி. ஆளும் பாஜகவினர் இந்த வீடியோவை ஷேர் செய்து எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், “சோனியா, ராகுல், பிரியங்கா, கார்கே போன்றோரெல்லாம் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?” என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.

“திமுக தரப்பில் இருந்து வரும் வெறுப்பு பேச்சுகள் தொடர்கின்றன, சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் அழைப்புவிடுத்தார், தற்போது ஆ.ராசா இந்தியாவை பிளவுபடுத்துவதற்கு அழைப்பு விடுக்கிறார், பகவான் ராமரை கேலி செய்கிறார், INDIA கூட்டணி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?” என பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

வழக்கம்போல் INDIA கூட்டணித் தலைவர்களோ, “அது தனிப்பட்ட கருத்து. அதற்கும் INDIA கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரிய ஸ்ரீநேட், “ராமர் மதங்கள், சமூகங்கள், சாதிகளுக்கு அப்பாற்பட்டவர். ராமர் என்றால் கண்ணியம், நெறிமுறை, அன்பு. இக்கருத்தை நான் முற்றிலுமாக கண்டிக்கிறேன். நான் இதை ஆதரிக்கவில்லை. மக்கள் பேசும்போது நிதானத்தை கண்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

உண்மையில் ஆ. ராசா பேசியதுதான் என்ன?

உண்மையில் பரப்பப்பட்டு வரும் சிறு பகுதி வீடியோவுக்கு ஆ.ராசா பேச்சின் முழுத்தன்மைக்கு பார தூரமான வித்தியாசம் இருக்கிறது. அர்த்தமே மாற்றிப் பொருள் கொள்ளும் அளவிற்கு உள்ளது. அவர் எங்கே பேசினார், என்ன பேசினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

கடவுள் மீது எங்களுக்கோ, அண்ணாவிற்கோ, கலைஞருக்கோ, பெரியாருக்கோ கூட கோபம் இல்லை!! - ஆ.ராசா

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் தனியார் திரையரங்கு அருகே திமுக சார்பில் திமுக எம்.பி. ஆ. ராசா கலந்துகொண்டார். அவர் பேசியதாவது, “இந்த ஊரில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். நம் தீபாவளிப் பலகாரம் அங்கு செல்கிறது. அங்கிருந்து பிரியாணி வருகிறது. கிறிஸ்துமஸ் கேக் நமக்கு வருகிறது. என்ன பிரச்சனை. எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், இஸ்லாமியர்கள் வழிபடும் ஒலி கேட்டால் நாம் பேச்சை நிறுத்திவிடுகிறோம் அல்லவா. இதுதானே சமூக நல்லிணக்கம். அது அவர்கள் நம்பிக்கை.

குஜராத்தில் பில்கிஸ் பானுவிற்கு நடந்தது என்ன?

பில்கிஸ் பானு தனது 6 மாத கைக்குழந்தையை அழைத்துக்கொண்டு செல்கிறார். அவருடன் 13 இஸ்லாமியர்களும் செல்கிறார்கள். எதிர்புறம் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வந்து ஜெய் ஸ்ரீ ராம் என்கிறார்கள். குழந்தையை கொல்கிறார்கள். அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள். இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது. அந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க, குஜராத் அரசாங்கம் அமைச்சரவையை கூட்டி, அவர்கள் ஏற்கனவே 10 வருடங்கள் இருந்துவிட்டார்கள், தண்டனை போதும், பிராமணர்கள் நல்லவர்கள் என சொல்லி விடுவித்தார்கள். அவர்கள் வெளியில் வரும்போது, எல்லா பாஜக காரர்களும் சென்று ஜெய் ஸ்ரீ ராம், பாரதமாதாக்கு ஜெய் என சொல்கிறார்கள். வெட்கமாக இல்லை. உச்சநீதிமன்றம் அழைத்து, மதத்தின் பேரால் இப்படியா செய்வீர்கள் மீண்டும் உள்ளே போடுங்கள் என்றது. பாஜக தலைவரிடம் பேட்டி கேட்டால், அவர்கள் பிராமணர்கள், நல்லவர்கள், அவர்களை விடுவித்தால் தவறில்லை என்கிறார்.

அன்புதான் கடவுள் என்று சொல்லுங்கள். மனிதனுக்கு மனிதன் காட்டுகிற இரக்க உணர்வில் தான் கடவுள் இருக்கிறார் என சொல்லுங்கள். கள்ளம் இல்லாத உலகம் அதுதான் கடவுளின் உலகம் என சொல்லுங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என சொல்லுங்கள். அப்படிப்பட்ட கடவுள் மீது எங்களுக்கோ, அண்ணாவிற்கோ, கலைஞருக்கோ, பெரியாருக்கோ கூட கோபம் இல்லை. ஆனால் நீங்கள் சொல்லிகிற கடவுள் இந்தக் கடவுள் என்றால், இதுதான் ஜெய் ஸ்ரீ ராம் என்றால், இதுதான் பாரதமாதாவிற்கு ஜே என்றால் அந்த ஜெய் ஸ்ரீ ராமையும், பாரத மாதாவையும் ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. நீங்கள் வேண்டுமானால் சொல்லிப்பாருங்கள் ராமனுக்கு எதிரி என. நாங்கள் என்ன ராமனுக்கு எதிரியா?

கம்பராமாயணத்தில் இருந்து சொன்னதென்ன?

ராமருடன் நான்கு பேரு அண்ணன் தம்பி. சீதையை தேடி காட்டிற்குள் செல்கிறார்கள். வேட்டுவ இனத்தில் குறவனாக காட்டில் இருக்கும் குகன் வருகிறார். குகன் ராமனை தொழுது தேனும் மீனும் கொடுக்கிறார். ராமர் மீன் சாப்பிட மாட்டார். ஆனால், அன்போடு தேனை வாங்கிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு, மீனை சாப்பிட மாட்டேன் என சொல்லி கொடுத்துவிட்டு, ‘நாங்கள் நான்கு பேர், குகனோடு ஐவரானோம்’ என்கிறார். அதன்பின் சுக்ரீவன் வருகிறார். போருக்கு துணை நிற்கிறார். குகனோடு ஐவரானோம், குன்றுசூழ்வான் மகனோடு அறுவரானோம் என்கிறார். அதன்பின் விபீசனன் வந்தார். ‘குகனோடு ஐவரானோம், குன்றுசூழ்வான் மகனோடு அறுவரானோம் நின்னோடு எழுவரானோம்’ என்கிறார். எனக்கு ராமாயணத்தில் நம்பிக்கை இல்லை, ராமர் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், கதையில் இருந்ததை சொல்கிறேன். இதுதான் கம்ப ராமாயணம். இத்தகைய ராமாயணத்திற்கு பேர் தான் மனித நல்லிணக்கம்.

இந்தியா ஒரு நாடா?

இந்த நாடு ஒரு நாடு அல்ல. பல மொழி, பல இனம், பல தேசிய இனம், பல மதம். இங்கு தமிழ், மலையாளம், ஒரியா தனித்தனி தேசிய இனம். ஒவ்வொருத்தருக்கும் கலாச்சார அடையாளம் இருக்கிறது. யாரும் தாழ்ந்தவரும் இல்லை, மேலானவரும் இல்லை. ஆனால் பழக்கவழக்கம், பண்பாடும், மொழியும் வேறு வேறு. சென்னை, மதுரை, கோவையில் பேசும் தமிழே வேறு வேறானது. இல்லை எல்லாம் ஒன்று தான் என சொல்லி எல்லாம் இந்து என்று சொன்னால் எப்படி. இந்தியா ஒரு தேசம் அல்ல, துணைக்கண்டம் என சொன்னவர் அம்பேத்கர், நேரு. பல்வேறு தேசிய இனங்களை இந்தியத்துணைக்கண்டமாக வைத்திருக்கிறோம். இந்திய துணைக்கண்டத்தை வலிமையாகவும் ஒற்றுமையாகவும் வைத்திருக்க வேண்டும்.

இந்தியாவை நாம் எப்படி கட்டமைத்திருக்கிறோம். இந்தியர்களாகிய நாங்கள் இந்தியாவை ஜனநாயக குடியரசு நாடாக, மதச்சார்பற்ற நாடாக சோசலிச நாடாக உருவாக்கி இருக்கிறோம். அப்படியானால் இது ஜனநாயக, சமதர்ம, குடியரசு, மதச்சார்பற்ற நாடு. இதை கூட்டவோ குறைக்கவோ முடியாது. அரசியல் சட்டத்தை பலமுறை மாற்றியுள்ளோம்.

1972ல் 13 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பொன்றை அளித்தது. அரசியலில் யாருக்கு வேண்டுமானாலும் மெஜாரிட்டி வரும், நல்லது கெட்டது நடக்கும். ஆனால் இந்தியா பாதுகாப்பாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சொன்னால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை மாற்றக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை மாற்ற வேண்டும் என சொல்கிறார். இதை இந்து நாடென்று அறிவிக்க வேண்டுமாம். இஸ்லாம், கிறிஸ்தவம் இங்கு இருக்கக்கூடாது.

இந்து தேசியமாக மாற்றும் பாஜக

அவர்கள் (பாஜக) இந்தியா முழுக்க இந்து நாடாக மாற்றி, ஒரு கடவுளை இங்கு கொண்டு வந்து, இந்து தேசியமாக மாற்றுகிறார்கள். மதம் எப்படி தேசியமாகும். மொழி என்பது தேசியம். நாடும் ஒரு தேசிய உணர்வுதான். மதம் ஒரு தேசியம் என்றால் ஈரான், ஈராக்கிற்கு ஏன் சண்டை. இருவரும் குரான் தானே படிக்கிறார்கள். இருவருக்கும் அல்லாதானே கடவுள். நார்வே, ஸ்வீடனுக்கும் ஏன் சண்டை. இருவரும் பைபிள் தானே படிக்கிறார்கள். இருவரும் கிறிஸ்தவர்கள் தானே. பைபிளையும், ஏசுநாதரையும் ஏற்றுக்கொண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடுகிற எல்லோரும் தேசியம் என்றால் இந்த உலகத்தில் கிறிஸ்தவ தேசியம், இஸ்லாமிய தேசியம் உண்டா. யாரை ஏமாற்றுவதற்கு இந்து தேசியம் என சொல்கிறீர்கள். எல்லோரும் இந்துவா. ஆயிரம் வருடங்களாக படிக்க வேண்டாம் என சொன்ன அருந்ததியரும் இந்து, ஆயிரம் வருடங்களாக படித்து அக்ரஹாரத்தில் இருக்கும் நீங்களும் இந்துவா?” என தெரிவித்தார்.

ஆனால், ராமர் கோயிலை வைத்து பிரதமர் உள்ளிட்ட பாஜகவினர் அரசியல் செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். அதனால், அயோத்தி ராமர் கோயில் விழாவையும் புறக்கணித்தனர். அதனையே தான் ஆ.ராசாவும் தன்னுடைய பேச்சில் வெளிப்படுத்தினார். ராமர் பெயரை சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம் என்ற கருத்தையே முன் வைத்தார். ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சியினர் அதனை எடுத்து கையாள முடியாமல் ஒன்று ஒதுக்கி விடுகின்றனர்; இல்லையென்றால் எதிர்க்கின்றனர். உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய விவகாரத்திலும் இதுவே நடந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com