உசிலம்பட்டி: ‘என் மகனை படிக்கவச்ச இடம் இது’ - அரசுப் பள்ளிக்கு இலவசமாக பணிசெய்து கொடுத்த கொத்தனார்!
செய்தியாளர்: பிரேம்குமார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தில் மராமத்து வேலைகள் பல இருந்துள்ளன. இதையறிந்து தலைமை ஆசிரியர் தனபால், முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவனின் தந்தையும், உத்தப்புரத்தைச் சேர்ந்த கொத்தனாருமான அழகு முருகனிடம் மராமத்துப் பணிகளை பார்க்கச் சொல்லியுள்ளனர்.
அதன்பேரில் மூன்று நாட்கள் பள்ளியில் உள்ள அனைத்து மராமத்து வேலைகளையும் பார்த்துள்ளார் அழகு முருகன். பின், “எனக்கு கூலி வேண்டாம். இந்த பள்ளிக்காக இலவசமாக செய்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.
“நீங்கள் பார்த்ததுக்கு உண்டான கூலியை பெற்றுக் கொள்ளுங்கள்” என ஆசிரியர்கள் கூறியதற்கு, “இப்பள்ளி என் மகனுக்கு எவ்வளவோ செய்துள்ளது. இப்பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியாக இது இருக்கட்டும்” என்று பணத்தை வாங்க மறுத்துள்ளார் அழகு முருகன்.
இது குறித்து அழகு முருகன் கூறுகையில், “எனது மகன் இப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்துவிட்டு தற்போது திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படிக்கிறார். எனது மகனின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய பள்ளிக்கு ஏதோவொரு வகையில் உதவி செய்ய வேண்டும் என எண்ணினேன். அதனால் கூலி வாங்காமல் வேலை பார்த்தேன். உண்மையில் இது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
இந்த சம்பவம் குறித்து ஆசிரியர்கள் கூறும்போது... “எங்களது எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவர்களின் மீது மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அழகு முருகன் அவர்களின் மகனும், எங்கள் முன்னாள் மாணவருமான பீமன், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியபின் விடுமுறை நாட்களில்கூட பள்ளிக்கு வந்து பூச்செடிகள், மரங்கள் நட்டு வளர்த்தார்.
இப்போது அவரது தந்தை பணம் வாங்காமல் எங்கள் பள்ளியில் வேலை செய்தது எங்கள் அனைவருக்கும் மிகவும் சந்தோஷத்தை அளித்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அவருக்கு சால்வை அணிவித்துள்ளார். அழகு முருகன் அவர்களுக்கு ஆட்சியர் கௌரவம் செய்தது எங்கள் பள்ளிக்கு கிடைத்த பரிசாகவே நினைக்கிறோம்” என்றனர்.