24ஆண்டுக்கு பின் வங்கக்கடலில் உருவானது.. 3 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் உருவாகி, மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் இத்தகைய தாழ்வுப் பகுதி உருவாகுவது குறிப்பிடத்தக்கது.
வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தெற்கு வங்கக்கடலின் அருகிலுள்ள மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது மேலும், மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, இந்திய பெருங்கடல் பகுதியில் மேலும் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் தற்போது தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மழைக்கு வாய்ப்பு..
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 19ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 19ஆம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், காவிரிப்படுகை மாவட்டங்கள் மற்றும்காரைக்கால் பகுதிகளில், மிதமானமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20ஆம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழைபெய்யலாமென கணிக்கப்பட்டுள்ளது. 21ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

