தவெக சமத்துவ கிறிஸ்துமஸ் விழா| 'நாட்டுக்கே அரசனாகி காப்பாற்றுவான்..' விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், விஜய் தலைமையில் பல்வேறு சமுதாயத்தினர் கலந்து கொண்டனர். விஜய், சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பைபிள் கதையை மேற்கோள் காட்டி, தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். இளைஞர்களுக்கு முக்கியமான தலைவராக விஜய் திகழ்வதை விருந்தினர்கள் பாராட்டினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார ஓட்டலில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற விழாவில், பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் சிறுவர், சிறுமிகளுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி, நவாப்சாதா முகமது ஆசிப் அலி திவான், சகோதரி பி.கே. முத்துமணி பிரம்ம , டாக்டர் பால் தினகரன், போதகர் கெர்சன் எடின்பெரோ, ஆயர் டாக்டர் ஏ. மிதுலேஷ் உள்ளிட்ட பலபேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் பேசிய விருந்தினர்கள், விஜயிடம் பெயர், புகழ், பணம் எல்லாமே இருக்கிறது இருந்தாலும் தமிழக மக்களுக்கு சேவை செய்ய விஜய் வந்துள்ளார். விஜய் தற்கால இளைஞர்களுக்கு முக்கியமான தலைவராக உள்ளார். விஜய் போன்ற இளம் தலைவர்கள் தமிழகத்திற்கு தேவை. விஜய்க்கு இளைஞர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். விஜயின் எண்ணம் அமைதி, ஒற்றுமை, சமத்துவம் இருக்க வேண்டும் என நினைக்கிறார் என பேசினர்.
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி..
சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய விஜய், "தமிழ்நாட்டு மண். தாயன்பு கொண்ட மண். ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றுதானே.. அதுபோல பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எல்லா பண்டிகைகளையும் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஊர்தான் நம்ம ஊர்.
பைபிளில் நிறைய கதைகள் உண்டு. குறிப்பாக ஒரு கதையில், ஒரு இளைஞருக்கு எதிராக சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு பாழுங் கிணற்றில் தள்ளிவிடுவார்கள்.. பின் அந்த இளைஞர் மீண்டு வந்து அந்த நாட்டுக்கே அரசனாகி தனக்கு துரோகம் செய்த தனது சகோதர்கள் மட்டுமின்றி அந்த நாட்டையே காப்பாற்றிய நிறைய கதைகள் உண்டு.
கடவுளின் அருளும், மக்களை மானசிகமாக நேசிக்கும் அன்பும், அதீத வலிமையும், உழைப்பும் இருந்துவிட்டாலே போதும்.. எவ்வளவு பெரிய எதிரிகளையும் ஜெயிக்கலாம் என்பதையே இத்தகைய கதைகள் உணர்த்துகின்றன. சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100 சதவீதம் உறுதியாக இருப்போம். அதனால்தான் தவெக கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள் என பெயர் வைத்தோம்.
கண்டிப்பாக ஒரு ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அனைத்துப் புகழும் எல்லா வல்ல இறைவனுக்கே.. Praise the Lord. Confident ஆக இருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" என பேசினார்.

