குடிசை வீடு TO நீதிபதி இருக்கை.. வறுமையை வென்று சொந்த முயற்சியில் சாதனை படைத்த மயிலாடுதுறை இளைஞர்!

தரங்கம்பாடியில் கூலி தொழிலாளியின் மகன் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றும்,"தன்னை நீதிபதியாக பார்க்க பெற்றோர் இல்லையே" என கண்கலங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலதண்டாயுதம்
பலதண்டாயுதம்PT WEB

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே  முனிவளங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்- அஞ்சம் மாள் தம்பதி. இருவரும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இவர்களது மகன் பலதண்டாயுதம் தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை உணர்ந்து  சிறு வயது முதலே கூலி வேலைக்குச் சென்று  பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். பின்னர் வழக்கறிஞர் ஆக வேண்டும் என விரும்பிய அவர், ஏழ்மை நிலை காரணமாக மேல் படிப்பைத் தொடர முடியாமல், கடந்த ஏழு ஆண்டுகள் பல்வேறு கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். இருப்பினும்  தான் வழக்கறிஞராக வேண்டும் என விடா முயற்சியில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலுவலகத்தில் எழுத்தராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பலதண்டாயுதம் பெற்றோர்
பலதண்டாயுதம் பெற்றோர்

இதனைத்தொடர்ந்து, பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி தாவரவியல் இளங்கலை படிப்பை முடித்து விட்டு, பின்னர்  திருச்சி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு முடித்தார். வழக்கறிஞராகத் தன்னை பதிவு செய்து கொண்டு மயிலாடுதுறை மற்றும் செம்பனார்கோவிலில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது திடீரென  அவருடைய பெற்றோர் உயிரிழந்துள்ளனர். 

பின்னர் சொந்த ஊரில் வசித்து வந்த அவர், நீதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தனது 36 வயதில்  உரிமையியல் நீதிபதியாகத் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்.

பலதண்டாயுதம்
குடிசை வீட்டிலிருந்து ஒரு நீதிபதி.. அரசு பள்ளி, கல்லூரிகளில் பயின்ற கூலித் தொழிலாளியின் மகள் சாதனை!

கடந்த 2015க்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக நீதிபதியாக இளைஞர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதியாகத் தேர்வாகியுள்ள பலதண்டாயுதத்திற்கு  மயிலாடுதுறை வழக்கறிஞர் அலுவலகத்தில் மாலை அணிவித்து கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். ஏழ்மை நிலையிலும் விடா முயற்சியிலும் நீதிபதியாகத் தேர்வு பெற்றுள்ள பலதண்டாயுதத்திற்கு வீடு தேடிச் சென்று பலர்  சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அப்போது பேசிய, பலதண்டாயுதம், "ஏழ்மை நிலையில் தன்னுடன் இருந்த தனது பெற்றோர் தற்பொழுது தான்  நீதிபதியாகத் தேர்வாகியுள்ள நிலையில் அதனைக் காண தன்னுடன் இல்லையே” எனக் கண்கலங்கிய சம்பவம் அங்கிருந்த பலரையும் கண்கலங்க வைத்தது.

பலதண்டாயுதம்
மயிலாடுதுறை: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இந்து முறைப்படி திருமணம் செய்த தைவான் இணையர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com