சென்னை | மனைவியைப் பழிவாங்க 7 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரன்! என்ன நடந்தது?
சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (38).. இவர் சொந்தமாக பழைய ஸ்பீக்கர் வாங்கி விற்பதும், சர்வீஸும் செய்யும் கடையை நடத்தி வருகிறார். நேற்று இரவு சதீஷ்குமார் தன் ஏழு வயது மகளை அழைத்துக் கொண்டு ஆலந்தூர் எம்கேஎச் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்..
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் சதீஷ் தன் அக்கா கெசியா என்பவருக்கு போன் செய்து தான் ஆலந்தூரில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பதாகவும், தனது மகளைக் கொலை செய்து விட்டேன் என்றும் தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி கெசியா உடனே ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு ஓட்டலுக்கு விரைந்து சென்றுள்ளார். பின்னர் ஓட்டல் அலுவலர் மற்றும் கெசியா இருவரும் சதீஷ் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்த போது சதீஷ் தன் மகளை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே உயிருக்கு போராடிய சதீஷ்சை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து சதீஷ் சகோதரி கெசியா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பரங்கிமலை காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பின்னர் இந்த சம்பவம் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சதீஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக பரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது . மேலும் மகள் ஸ்டெபி கடந்த ஓராண்டாக சதீஷ் உடன் வசித்து வந்த நிலையில் தற்போது குழந்தையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவரது மனைவி தொடர்ந்து பிரச்னை செய்து வந்தாக கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சதீஷ் மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாளோ என்ற எண்ணத்தில் நேற்று இரவு ஓட்டலுக்கு வந்து அறை எடுத்து தங்கி அதிகாலை மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது..
இருப்பினும் போலீஸார் இது குறித்து சதீஷ் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்நிலையில் ஏற்கனவே ஒருமுறை மனைவியை கத்தியால் குத்த முயன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மவுண்ட் பகுதியில் தனது ஆறு வயது மகளை கொலை செய்த சதீஷ்குமாரை கைது செய்ய வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் உறவினர்கள் பெரம்பூர் மங்களபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சதீஷை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குழந்தையின் மரணத்திற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காததை காரணம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தனது வீட்டிற்கு வந்து கத்தியை காட்டி மிரட்டியதாக ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதால் தன் குழந்தை உயிரை வந்ததாக கூறி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ள அவரது தந்தை சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இன்று காலை நீதிமன்ற நீதிபதி தீபிகா மருத்துவமனைக்கு வருகை தந்து ரிமாண்ட் உத்தரவிட்டார்.
மேலும் இருதினங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை மேற்கொண்டு பின் ஸ்டான்லி கைதிகள் வார்டுக்கு மாற்றுமாறு தெரிவித்தார். இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்டான்லி மருத்துவமனை கைதிகள் வார்டில் அனுமதிக்கும்படி போலீசார் தரப்பில் நீதிபதிக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை கைதிகள் வார்டுக்கு மாற்ற நீதிபதி அனுமதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சதீஷ்குமாரை மவுண்ட் போலீசார் ஸ்டான்லி மருத்துவமனை கைதிகள் வார்டுக்கு மாற்றம் செய்து வருகின்றனர்.