புதுக்கோட்டை| மகளுக்காக தந்தையின் விநோத செயல்.. 79 வயதில் ஆச்சரியம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 வயதான செல்லதுரை, மகளின் மகிழ்ச்சிக்காக ஒவ்வொரு பொங்கலிலும் 10 கிலோமீட்டர் தூரம் தலையில் கரும்பு சுமந்து மிதிவண்டியில் பயணம் செய்கிறார். மகளின் வாழ்வில் மலர்ந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக, அவர் இந்த வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். அவரது பாசம் மற்றும் உடல்நலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
சாதாரணச் சாலைப் பயணங்களுக்கு மத்தியிலும் சிலரது பயணம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். அப்படி ஒரு நெகிழ்ச்சியான மற்றும் ஆச்சரியமான காட்சிதான் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது.
79 வயதான முதியவர் ஒருவர், சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை கைகளால் பிடிக்காமல் தலையில் கரும்புச் சுமையைச் சுமந்தபடி மிதிவண்டி ஓட்டிச் சென்றது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான செய்தியைப் பார்க்கலாம்.
மகளுக்காக 79 வயதில் நெகிழவைக்கும் தந்தை..
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே உள்ள கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. 79 வயதான இவருக்குச் சுந்தராம்பாள் என்ற மகள் உள்ளார். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான சுந்தராம்பாளுக்கு, நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
மகளின் வாழ்வில் மலர்ந்த இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, கடந்த எட்டு ஆண்டுகளாகத் தந்தை செல்லதுரை ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார். ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும், வம்பன் கடைவீதியிலிருந்து மஞ்சள், தேங்காய், பழம் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வாங்கி, தனது மகளின் ஊரான நம்பம்பட்டிக்கு மிதிவண்டியிலேயே நேரில் சென்று வழங்குகிறார்.
வம்பனிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகளின் வீட்டிற்குச் செல்லும்போது, மற்ற பொருட்களை மிதிவண்டியில் கட்டிவிடுகிறார். ஆனால், கரும்புக்கட்டை மட்டும் தனது தலையில் சுமந்து கொள்கிறார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த 10 கிலோமீட்டர் தூரமும், தலையிலிருக்கும் கரும்பைக் கைகளால் ஒருமுறை கூடப் பிடிக்காமல், மிகச் சரியான பேலன்ஸுடன் மிதிவண்டியை ஓட்டிச் செல்கிறார்.
79 வயதிலும் தளராத உடல்நலத்துடன், தனது மகளின் மீதான தீராத பாசத்தால் அவர் மேற்கொண்டு வரும் இந்தப் பயணம், அந்தச் சாலை வழியாகச் செல்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. "பெற்ற பிள்ளைகளுக்காகச் செய்யும் எதையும் சுமையாகக் கருதவில்லை" என்பதே செல்லதுரையின் புன்னகையான பதிலாக இருக்கிறது.

