விஜயின் ஜனநாயகனுக்கு ராகுல் காந்தி ஆதரவு., தேர்தல் அரசியலா? தவெகவை காப்பாற்றும் முயற்சியா?
விஜயின் ஜனநாயகன் படத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சி என்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில், பிரதமர் மோடியால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகளை தொடர்ந்து, ராகுல் காந்தியும் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியது, அரசியல் வட்டாரத்தில் பல யூகங்களை எழுப்பின.
ஒருபக்கம் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவரும் காங்கிரஸ், இன்னொரு பக்கம் ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறது. இதனால், 2026 தேர்தலில், தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறதா என யூகங்களை எழுப்பியது. அதேநேரம், ஜனநாயகன் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள தவெக இணைப் பொதுச்செயலர் நிர்மல் குமார், காங்கிரஸ் தொடர்பான தங்களது பழைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதையும் உறுதிபட கூறிவிட்டார். இதன்மூலம் காங்கிரஸ் விரும்பினாலும், அவர்களை தங்களது கூட்டணியில் இணைக்க தவெக தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.
இதேபோல்தான், ராகுல் காந்தியும் தேர்தல் கூட்டணிக்காக மட்டும் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், அதன்பின்னணியில் வேறொரு காரணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, ஜனநாயகன் தணிக்கை, கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை என, ஒரேநேரத்தில் மத்திய அரசு அமைப்புகள் மூலம் விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுக்கலாம். இதனால் விஜய் வேறு வழியின்றி பாஜக பக்கம் சென்றுவிடக்கூடாது என்றும் அவருக்கு வெளியில் இருந்தும் ஆதரவு இருப்பதை உணர்த்தவே, ராகுல் காந்தி உட்பட காங்கிரஸார் குரல் எழுப்புவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

