திருச்சி மாநகரில் மலைக்கோட்டை அருகே பெரிய கடை வீதி, சந்துக்கடையை ஒட்டியுள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில், ஜோசப் என்பவர் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் பழைய நகைகளை வாங்கி உருக்கி மோதிரம், கம்மல், மூக்குத்தி என பலவகையான ஆபரணங்களை செய்து, அவற்றை விற்பனைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்து வருகிறார்.
வழக்கம்போல் இன்று காலையும் அவர் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பட்டறைக்குள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 950 கிராம் நகைகள், ரூ.1.5 லட்சம் மற்றும் 250 கிராம் வெள்ளி நகைகள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மாநகர காவல் துணை ஆணையர் அன்பு மற்றும் உதவி காவல் ஆணையர் நிவேதிதா லஷ்மி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பழைய குற்றவாளிகள் இருவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறனர். கொள்ளை போன நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் ஆகும்.