'பருவமழை வழக்கத்தை விட குறைவாகப் பதிவு' - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், இதுவரை 38 சதவிகித அளவுக்கு மழைப்பொழிவு குறைவாக பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், எதிர்பார்த்ததை விட, நாடு முழுவதும் தற்போது 84 சதவீத அளவுக்கு குறைவான மழையே பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள 91 முக்கிய நீர்த் தேக்கங்களில் வழக்கத்தை விட மிகக் குறைவான அளவே நீர் இருப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கவலை தெரிவித்துள்ளது. இதில் 11 நீர்த்தேக்கங்கள் முற்றிலும் வறண்டு விட்டதாக தெரியவந்துள்ளது.
வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்நிலையில் கடந்த 22 ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 39 சதவிகித வீத அளவு வரை மழைப்பொழிவு குறைவாக பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 38 சதவீத அளவுக்கு மழை குறைவாக பெய்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் வாயு புயல் உருவானதால், தென்மேற்கு பருவமழை தொடங்கியும், கேரளாவில் அதிக மழைப் பொழிவு காணப்படவில்லை. எனினும், இந்த நிலை வரும் நாட்களில் மாற வாய்ப்பிருப்பதாகவும், அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.