வேலூர்
வேலூர் pt

வேலூர் | 'குலுக்கோஸ் ஏற்ற 20 இடங்களில் ஊசி?'.. பரிதாபமாக உயிரிழந்த 6 மாத குழந்தை! நடந்தது என்ன?

வயிற்றுப்போக்கு என மருத்துவமனைக்கு வந்த குழந்தைக்கு, குளுக்கோஸ் ஏற்ற பல இடங்களில் செவிலியர்கள் ஊசி செலுத்தியதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். என்ன நடந்தது பார்க்கலாம்.
Published on

செய்தியாளர்:ச.குமரவேல்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயந்தி - கார்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்த நிலையில் மனோஜ் என்ற ஆறு மாத கைக்குழந்தைக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று (11.4.2025) தனியார் கிளினிக் அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் மேல் சிகிச்சைக்காக குடியாத்தத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அனுமதித்ததில் இருந்தே குழந்தைக்கு குளுக்கோஸ் செலுத்த செவிலியர்கள் முறையாக ஊசி செலுத்தாமல் கழுத்து உட்பட பல இடங்களில் ஊசி குத்தியதாகவும், இதனால் உடலில் இருந்து ரத்தம் வழிந்து குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். பச்சிளம் குழந்தையின் உடலை கையில் ஏந்தி தாய் கதறி அழுத காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், முறையான சிகிச்சை அளிக்காத அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். 

இது குறித்து வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனரிடம் விளக்கம் கேட்ட போது, ’குழந்தை மருத்துவமனைக்கு வரும்போது வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்று இருந்தது. குழந்தைக்கு குளுக்கோஸ் செலுத்த சரியாக நரம்பு தெரியாததால் ஒன்றுக்கு இரண்டு முறை ஊசி குத்தி உள்ளார்கள். அப்போது பணியில் மயக்க மருந்து நிபுணர் இருந்துள்ளார். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு ஏதேனும் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனாலும் பாதித்து இருக்கும். இருந்த போதும் குழந்தை உயிரிழப்பு தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.” என்று தெரிவித்தார். 

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மற்றும் மருத்துவ இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஆகியோரின் உத்தரவின் பேரில் அணைக்கட்டு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மருத்துவர் சிங்காரவேலன், உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டார்.

வேலூர்
விருதுநகர் | ராட்டினத்தில் இருந்து விழுந்த இளம்பெண்.. பதைபதைக்க வைக்கும் காட்சி; அலறிய கூட்டம்..!

சுமார் 4 மணி நேர விசாரணைக்கு பின் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டு சென்றனர். இதனால் சுமார் 4  மணி நேரம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இது தொடர்பாக குடியாத்தம் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com