மதுரை ரயில் விபத்து: ‘இதுதான் காரணம்’ விசாரணையில் வெளிவந்த அடுத்த அதிர்ச்சி தகவல்!

மதுரையில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பான விசாரணையில், சம்பந்தப்பட்ட 5 பேர் கன்னியாகுமரியில் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் ஒன்றை விலை கொடுத்து வாங்கியது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மதுரையில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களுக்கு ஆன்மீக சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்த சுற்றுலா நிறுவன ஊழியர்களான தீபக், சத் பிரகாஷ், சுபம் கஸ்பாய், நரேந்திரகுமார், ஹார்திக் சஹனி உள்ளிட்ட (டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர்) எனும் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை ரயில் தீ விபத்து
”கதவ அடைச்சிட்டு சிலிண்டரில் டீ போட்டுருக்காங்க” - மதுரை ரயில் தீ விபத்துக்கான அதிர்ச்சி காரணம்!

இந்த 5 நபர்களுமே சுற்றுலாப் பயணிகளுக்குச் சமைத்துக் கொடுப்பதற்காக 15 அடுப்புகள், 2 எரிவாயு உருளைகள், நிலக்கரி, மண்ணெண்ணெய், விறகு உள்ளிட்டவைகளை ரயிலுக்கு கொண்டு வந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்கள் கன்னியாகுமரியில் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் ஒன்றை விலை கொடுத்து வாங்கியது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவ்வாறு வாங்கப்பட்ட கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரில் கேஸ் கசிந்துதான், இந்த பெரும் விபத்து நடைபெற்று உள்ளது என ரயில்வே போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்ட மேற்கண்ட 5 நபர்களும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்கட்ட பரிசோதனை முடிந்தபிறகு மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட 5 பேரையும் செப்டம்பர் 11 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com