ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி; நின்றது சிசுவின் இதயதுடிப்பு! கொடூரனால் ஏற்பட்ட துயரம்
வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் குழந்தை உயிரிழந்திருப்பதாக துயர செய்தி வெளியாகியுள்ளது.
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் சித்தூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்துள்ளார். கர்ப்பிணி பயணித்த, பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட தனிப்பெட்டியில் ஆண் ஒருவர் ஏற, இதில் ஆண் பயணிகள் பயணம் செய்யக் கூடாது என்று அந்த கர்ப்பிணி கூறியும் பயணித்த அந்த கொடூரன், கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதனால், அந்தப் பெண் கூச்சலிட முயன்ற போது, ஓடும் ரயிலிலிருந்து அந்தநபர் அவரை கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதனால், கை, கால்கள் முறிவுப்பட்டு பலத்த காயமடைந்த கர்ப்பிணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த சம்பவத்திற்கு மகளிர் ஆணையம் உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இப்படி, 4 மாத கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்நிலையில், குழந்தையின் இதயத்துடிப்பு நின்றுள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.