விழுப்புரம்: ரூ 1.60 கோடி மதிப்பில் ஹவாலா பணம் பறிமுதல்... 4 பேர் கைது!
செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சுதாகர், முருகவேல் ஆகிய இருவரும் பேருந்து நிலையத்தில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான்கு இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமாக பையை மாட்டிக்கொண்டு நடந்து சென்றுள்ளனர். அவர்கள் நான்கு பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் நான்கு பேரும் சென்னையிலிருந்து ரயில் மூலமாக ஒரு கோடியே 60 லட்சம் மதிப்பிலான ஹாவாலா பணத்தினை எடுத்து வந்தது தெரியவந்தது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து மூலமாக திருச்சிக்கு எடுத்து செல்வதற்காக விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு அவர்கள் வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நான்கு பேரையும் தாலுக்கா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில், பிடிபட்டவர்கள் திருச்சி வரகனேரி பகுதியை சார்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், அபுபக்கர் சித்திக், ராஜ்முகமது, ஆகிய நான்கு பேர் என்பதும் இவர்கள் குருவியாக செயல்பட்டதும் தெரியவந்தது. இவர்கள் சென்னை பிராட்வே பகுதியில் பணத்தை பெற்று வந்த நிலையில் யாருக்காக இந்தப்பணம் கொண்டுவரபட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.