
தூத்துக்குடி திருவிக நகரைச் சேர்ந்த கார்த்திகாவும், மாரிச்செல்வமும் கடந்த நான்காண்டுகளாக காதலித்த நிலையில், இரு வீட்டாருக்கும் அடிக்கடி மோதல் போக்கு இருந்துவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி திடீரென வீட்டைவிட்டு வெளியேறிய கார்த்திகா, மாரிசெல்வத்துடன் சேர்ந்து கோவில்பட்டி சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து திருமணம் முடித்து 2ஆம் தேதி காலை மாரிசெல்வம் - கார்த்திகா தம்பதியர் வீட்டுக்கு வந்துள்ளனர். இதையறிந்து அங்கு வந்த கும்பல் இருவரையும் வீடு புகுந்து வெட்டிக் கொன்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்னர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து மாரிசெல்வத்தின் குடும்பத்தினரிடமே இருவரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம் ஜோடியின் உடல்களை கண்டு அங்கிருந்தவர்கள் கதறி அழுதனர். பின்னர் இருவரின் உடல்களும் சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள எரியூட்டு தகன மேடையில் தகனம் செய்யப்பட்டன. இந்நிலையில் பெண்ணின் தந்தை உட்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.