புதுச்சேரி : அடுத்தடுத்து உயிரிழந்த மூவர்... விஷவாயு காரணமா? மறுக்கும் ஆட்சியர்!

புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூதாட்டி, அவரின் மகள், 15 வயது சிறுமி ஒருவர் என மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரிமுகநூல்

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தை சேர்ந்தவர் மூதாட்டி செந்தாமரை (வயது 72). இவர் இன்று காலையில் கழிவறைக்கு சென்று நீண்ட நேரமாக வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மூதாட்டியின் மகள் காமாட்சி, அங்கு சென்று பார்த்தபோது மூதாட்டி மயங்கி விழுந்தநிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து, அவரை மீட்கச் சென்ற காமாட்சியும் மயங்கி விழுந்துள்ளார்.

இவர்களை மீட்க சென்ற 15 வயது சிறுமியும் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இவர்களை சோதித்த மருத்துவர்கள், மூதாட்டியும், அவரின் மகளும் வழியிலே உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சிறுமி தீவிர சிகிச்சை பெற்றநிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரித்ததில், வீட்டின் அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் கசிந்த விஷவாயுதான் வீட்டில் உள்ள கழிவறை மூலம் வெளியாகி இம்மூவரையும் தாக்கியது எனக் கூறப்பட்டது.

இதனை நம்பி, இந்த விஷவாயுக்கள் வீடுகளின் கழிவறை மூலம் பரவுவதாக கூறி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கழிவுநீரை சரிசெய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதுவரை பொதுமக்கள் யாரும் கழிவறைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி
இடைத்தேர்தலில் சீமானுக்கு என்ன சின்னம்? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்!

இதுகுறித்து தெரிவித்த புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன், “மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். மேலும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, “ரெட்டியார் பாளையம் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். சுகாதாரம், மருத்துவம், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.

இப்படியாக இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ‘அங்கு விஷவாயு கசியவில்லை’ என்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், “முதற்கட்ட ஆய்வில் பாதாள சாக்கடையில் விஷவாயு கசிவு இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. 3 பெண்கள் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என கூறினார்.

இந்நிலையில் சிறுமி குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாயும், மற்ற 2 பெண்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்தார் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com