திருச்சி: காவிரி ஆற்றில் மூழ்கிய 3 பள்ளி மாணவர்கள் - ஒருவர் சடலமாக மீட்பு; இருவரை தேடும் பணி தீவிரம்
செய்தியாளர்: லெனின்.சு
திருச்சி கண்டோன்மென்ட் அரசு உதவி பெறும் தனியார் (ஆர்சி) மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், திருச்சி காவிரி ஆற்றில் அய்யாளம்மன் படித்துறையில், நேற்று மதியம் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஜாகிர் உசேன், விக்னேஷ் மற்றும் சிம்பு ஆகிய 3 மாணவர்கள், தெர்மாகோல் அட்டைகளை நீரில் பரப்பி அதனை பிடித்தவாறு நீச்சல் அடித்துள்ளனர். அப்போது தெர்மாகோல் அட்டை துண்டு துண்டாக உடைந்துள்ளது.
இதனால் பிடிமானத்தை இழந்த மூன்று மாணவர்களும் நீரில் மூழ்கி தத்தளிக்க ஆரம்பித்தனர். இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் சத்தமிட்டுள்ளனர். அதைக்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை. மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து மாவட்ட அலுவலர் ஜெகதீசன் உத்தரவின் பேரில் அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீயணைப்பு படை வீரர்கள் நீருக்குள் மூழ்கி தேடிய போது, ஆற்றுக்குள் முதலைகள் தென்பட்டன. இதனால் நீரில் மூழ்கி தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இன்று காலை தேடுதல் பணியை தொடர்ந்தனர். அப்போது நீரில் மூழ்கிய மாணவர்களில் ஒருவரான ஜாகிர் உசேன் சடமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், மேலும் இரண்டு மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.