தேனி: கேரள பதிவெண் கொண்ட காரில் இருந்து பெண் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை
செய்தியாளர்: சுரேஷ்குமார்
தேனி மாவட்டம் தமிழக - கேரள எல்லையான கம்பம் நகரில் இருந்து கேரளாவிற்குச் செல்லும் கம்பம் மெட்டு மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில், சேனை ஓடை அருகே உள்ள தனியார் காட்டுப் பகுதியில் கேரள மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அந்த காரில், ஒரு பெண் உட்பட கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் காரை பூட்டிய நிலையில், சடலமாக கிடந்துள்ளனர். இந்நிலையில், அந்த காட்டுப் பகுதிக்கு வேலைக்குச் சென்றவர்கள், காரில் மூன்று பேர் சடலமாகக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் கம்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காரில் இருந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர்கள், கோட்டயத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான சார்ஜ், அவரது மனைவி மெர்சி மற்றும் அவர்களது மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்கள் மூன்று பேரும் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பே வீட்டை பூட்டி விட்டு காரில் வெளியே சென்று விட்டதாகவும். நான்கு தினங்களாக வீடு திரும்பாததால் அவர்களை காணவில்லை என உறவினர்கள் கோட்டயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஜவுளி வியாபாரம் செய்த சார்ஜ் நீண்ட நாட்களாக கடன் பிரச்னையில் மிகவும் மன வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே கடன் தொல்லை தாங்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மகன் மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் கம்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.