அரசின் வங்கிக் கணக்கில் 22 கோடி மோசடி: சினிமா பாணியில் நடந்த திருட்டு.. காவல்துறை விசாரணையில் SHOCK!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கண்காணிப்பாளர் ராம் பிரசாத் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கில் இருந்து 22 கோடியே 30 லட்சம் ரூபாய் பணம் சைபர் குற்றவாளிகளால் முறைகேடாக எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
மேலும் சென்னை சிஐடி நகர் HDFC வங்கி கிளையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பெயரில் பராமரிக்கப்படும் வங்கி கணக்கில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, மர்ம நபர்களால் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அதிகாரிகளின் அனுமதி இன்றி வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், HDFC வங்கியின் S.N.A எனப்படும் ஒற்றை கணக்கு நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தை பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்தது.
பின்னர் இந்த பரிமாற்றம் நடந்த வங்கி கணக்கு யாருடையது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அரசின் பணம் சென்னை, சிவகங்கை, மேலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 24 வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இந்த வங்கிக் கணக்குளின் உரிமையாளர்களான ஏழு பேரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் அனைவருமே கமிஷனாக பணத்தைப் பெற்றுக் கொண்டு, தங்களுடைய வங்கி கணக்குகளை சைபர் கிரைம் கும்பலிடம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட ஏழு நபர்களில் மூன்று நபர்களை போலீசார் நேற்று சிறையில் அடைத்த நிலையில் மீதமுள்ள நான்கு நபர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

